புதுடெல்லி சிகந்தர்பூர் செக்டார் 26-ல் முகமது முஸ்தகில் என்ற ஆட்டோ ஓட்டுநர் தவறுதலாக சிக்னலில் சிகப்பு எரிந்ததைப் பார்க்காமல் தாண்டி விட்டு போலீசில் சிக்கினார். உடனே அதை எடு இதை எடு என்று போலீஸார் வழக்கம் போல் கேட்க, அவரிடம் கையில் ஆவணங்கள் இல்லை. டி.எல்.எஃப். பேஸ் 3இல்தான் வீடு உள்ளது போய் எடுத்து வருகிறேன் என்று அவர் எவ்வளவோ மன்றாடியும் போலீசார் கேட்கவில்லை என்று தெரிகிறது.
ரூ.32,500 அபராதம் விதித்து சலானை அவர் கையில் திணித்துள்ளனர். இது குறித்து முகமது முஸ்தகில் ஆட்டோ ஓட்டுநர் கூறும்போது, “எனக்கு 10 நிமிடங்கள் கொடுங்கள் வீட்டுக்குச் சென்று ஆர்சிபுக் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருகிறேன் என்று மன்றாடிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் எதையும் கேட்பதாக இல்லை. போக்குவரத்து விதிமீறல்களுக்கான தற்போதைய அபராத உயர்வு பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை” என்றார்.














