அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். கோவை மாவட்டத்தில் அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவிகிதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருந்ததாக புகாரில் அவர் தெரிவித்திருந்தார். இதே போல கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவரும் காவல் ஆணையரைச் சந்தித்து எஸ்.பி.வேலுமணி மீதும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் 2016 ஆம் ஆண்டு தான் காண்ட்ராக்ட் சம்பந்தமாக முன் தொகையாக ரூ.1 கோடியே 20 லட்சம் கமிஷன் கொடுத்ததாகவும் ஆனால் சிவில் ஒர்க் பணிகள் ஒதுக்கீடு செய்வதாக கூறி பணத்தை பெற்ற அமைச்சர் அதன்பின் எனக்கு பணி ஒதுக்கவில்லை. இப்படியே 2016 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டது. தற்போது ஆட்சியும் மாறிவிட்டதால் பணத்தை திரும்பக்கேட்டால் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.
காவல் ஆணையரிடம் திருவேங்கடம் அளித்த புகாரில், எனக்கு 2002ஆம் ஆண்டு முதல் எஸ்.பி.வேலுமணி பழக்கமானவர். முன் தொகையாக கமிஷன் கொடுத்தால் எனக்கு சிவில் ஒப்பந்த பணிகளை தருவதாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எஸ்.பி.வேலுமணி சொன்னதன் பேரில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் ரோஜா இல்லத்திற்கு நேரில் சென்று ஒரு கோடி ரூபாய் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 தேதியில் 20 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொடுத்தேன்.
பின்னர் அவர் சொன்னபடி அவருடைய பிஏ பார்த்திபனிடம் ஐந்து லட்ச ரூபாயையும் கொடுத்தேன். ஐந்து லட்சம் பணம் கொடுத்த விபரத்தை எஸ்.பி.வேலுமணியிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொன்னபடி எனக்கு சிவில் ஒர்க் காண்ட்ராக்ட் ஒப்பந்த பணிகளை கொடுக்கவில்லை வேறு ஒப்பந்ததாரர்களுக்கு அப்பணிகளை கொடுத்துவிட்டார். பணியும் ஒதுக்காமல், வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறீர்களே என்று நான் சொன்னதற்கு நாங்கள் பணத்தை கொடுக்கிறோம், நீங்கள் பொறுத்திருங்கள் எங்களை அவசரப்படுத்தினீர்கள் என்றால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொலை செய்துவிடும் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
அதேபோல், திமுக சட்டத்துறை செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் முறையே 464 கோடி, 346.81 கோடி ரூபாய் டெண்டர்கள் முறைகேடாக வழங்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
ஒரே கம்ப்யூட்டரில் இருந்து பல பணிகளுக்கு வெவ்வேறு நிறுவனங்களின் சார்பில் டெண்டர் அனுப்பப்பட்டதாகவும், சுமார் 10 நிறுவனங்கள் பேசி வைத்து டெண்டர் கேட்டதாகவும் கூறியுள்ளனர். அவரது சகோதரர் உள்ளிட்ட 17 பேர் மீது முதல் 19 பக்க முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதேபோல சென்னையில் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் தற்போது அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.அதை தொடர்ந்து அதிமுக நிர்வாகி வடவள்ளி சந்திரசேகர் சொந்தமான பண்ணை வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் 35 க்கும் மேற்பட்ட இடங்களிலும் சென்னை காஞ்சி புரத்தில் 15க்கும் மேற்பட்ட இடங்களிலும், திண்டுக்களிலும் சோதனை நடைபெறுகிறது. வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் ,சகோதரர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மதுக்கரையில் உள்ள வேலுமணியின் மைத்துனரும், மதுக்கரை நகர செயலாளருமான சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து அதிமுகவினர் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.













