தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15ஆவது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை முதல்வர் அழைத்துப் பேசவும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கவும் உடனடி நடவடிக்கை எடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
பயணிகளுக்கு வழங்கப்படும் சலுகையால் போக்குவரத்து கழகம் நட்டத்தில் இயங்குவது போன்ற ஒரு தோற்றம் உள்ளது. ஆனால், வேலையே பார்க்காத ஆளுங்கட்சி தொழிற்சங்க தலைவர்கள், நிர்வாகப் பிரிவில் இருக்கும் தேவையற்ற பெரிய பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதியம் ஒரு பெரும் சுமையாக இருக்கிறது.
அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் நிர்வாக இயக்குனருக்கு கீழ் பல பிரிவு மேலாளர்களோடு, செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உள்ள இணை இயக்குநர், உதவி இயக்குநர் போன்றவருக்கு அதிக தொகை வழங்கப்படுகிறது.
மக்கள் தொடர்பு அலுவலருக்கு மட்டும் மாதந்தோறும் சுமார் 1 இலட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேபோல் தேவைப்படாத பல்வேறு நிர்வாகப் பொறுப்பாளர்களுக்கும் மாநில அளவில் இலட்சக்கணக்கில் ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
உதிரி பாகங்கள் உபகரணங்கள் கொள்முதல் முதற்கொண்டு செலவினங்களை சரியாக தணிக்கை செய்தும், தேவையற்ற ஊதியம் சலுகைகளை தவிர்த்தும் மாதத்திற்கு சில கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும் என்கின்றனர்.
தொழிலாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை என்று கூறும் அரசு, இந்த நிர்வாக சீர்திருத்தத்தை முயற்சித்து பார்க்கலாம் என்பது பணியாளர்களின் கருத்து.