நெல்லை மேலப்பாளையம், மேலநத்தம் பகுதிகளில் சுமார் 25,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நீண்ட காலமாக பாதாள சாக்கடை திட்டத்தை மாநகராட்சி நிறைவேற்றாததால் இப்பகுதியில் உள்ள சாக்கடை நீர் பாளையங்கால்வாயில் கலந்து வந்தது. அதை மாநகராட்சியும் கண்டு கொள்ளவில்லை. பொதுப்பணி துறையும் அதை கண்டிக்கவில்லை.
இச்சூழலில் நெல்லை பைபாஸ் பாலம் அருகே வேலை நடப்பதால் அப்பகுதியில் பாளையங்கால்வாயை அடைத்து வைத்திருந்தனர். இதனால் கால்வாயில் சாக்கடை பெருகியது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 27 ஆம் தேதி ஷட்டரை அடைத்து சாக்கடையை தாமிரபரணி ஆற்றை நோக்கி திருப்பி விட்டனர்.
இதையடுத்து, தாமிரபரணி ஆறு முழுவதும் திடீரென கன்னங்கரேல் என்று ஆனது. துர்நாற்றம் பரவியது. ஆனாலும் அதை அசட்டை செய்து குடிநீர் ஆதாரமான ஆற்றில் தொடர்ந்து கழிவை கலக்கவிட்டு, மக்கள் உயிரோடு விளையாடினர்.
இதனை பொதுமக்களும் மக்கள் அமைப்பினரும் கண்டித்தனர். 24 மணி நேரத்தில் சாக்கடையை முற்றிலும் நிறுத்தா விட்டால், நெல்லை தெற்கு பைபாஸ் பாளையங்கால்வாய் பாலத்தில் மறியல் செய்யப்போவதாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் அறிவித்தனர்.
அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆற்றில் சாக்கடை கலப்பதை முற்றிலுமாக பொதுப்பணி துறையினரும் மாநகராட்சியினரும் தடுத்தனர்.
இதனால் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டத்தை ஒத்தி வைத்தனர். ஆனாலும், இதுபோன்று அடிக்கடி மாநகராட்சியினரும் பொதுப்பணி துறையினரும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆற்றை மாசுபடுத்துவதால், அதை கண்டிக்கும் வகையில் இயக்கத்தின் பொதுச்செயலாளரான பத்திரிகையாளர் அய்கோ தலைமையில் பாளையங்கால்வாயில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, கலெக்டர் கார்த்திகேயனிடம் சட்ட நடவடிக்கை கோரி விண்ணப்பம் அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், ‘வேண்டுமென்றே ஆற்றில் சாக்கடையை திறந்து விட்ட பொதுப்பணித்துறையினர், மாநகராட்சியினர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 269, 277, 278ன் படியும், நீர் மாசு தடுப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டப்பிரிவு 43 ன் படியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளின் படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டருக்கு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133 ஆம் பிரிவின்படியும், பொது சுகாதார சட்டம் 20ஆம் பிரிவின்படியும் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை நடத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஷட்டரை அடைத்து சாக்கடையை ஆற்றில் கலக்கவிட்ட பொதுப்பணித் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த தொடர் போராட்ட நடவடிக்கையில், தாமிரபரணி பாதுகாப்பு இயக்க கருத்தாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளருமான முத்து வளவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரான கண்மணி மாவீரன், சமூக சேவகர் புல்லட் ராஜா,
தாமிரபரணி பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர்கள் ஓவியர் செல்வம், சாந்தா, பால் அண்ணாதுரை, கிருஷ்ணன், மணிகண்டன், வேல் உபேந்திரன், பொன்ராணி, ஜெலின், கணேசன்,அருள்ராஜ், ராபின்சன், டேனியல், முகமது யாசின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் உதவி காவல் ஆணையர் சதீஷ்குமார் தலைமையில், ஆய்வாளர் வாசிவம் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.