புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பூவற்றக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான் . கட்டிட மேஸ்திரியான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த உறவுக்காரரான துரை ( 42 ) ரூ .1,000 கடன் வாங்கியிருந்தார் . கொத்தனாரான துரை ,தான் வாங்கிய கடனில் ரூ .600 க்கு நாகூரானிடம் வேலை பார்த்து ஈடுகட்டினார் . மீதம் ரூ .400 கடன் திருப்பி செலுத்த வேண்டியிருந்தது .
இந்த நிலையில் கடன் பாக்கி தொகையை திருப்பி கேட்டு நாகூரானின் மனைவி , துரையின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார் . வீட்டில் துரையின் மனைவி செல்வராணி மட்டும் இருந்த நிலையில் கணவரிடம் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார் . இந்நிலையில் கடன் பாக்கி தொகை தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம்
தேதி இரவு துரைக்கும் , நாகூரானுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது . இதனிடையே நாகூரானின் மகன் மாரிமுத்து ( 22 ) அங்கு வந்தார் . அப்போது துரையின் மனைவி செல்வராணி மாரிமுத்துவின் கைகளை பிடித்து கொள்ள துரை வீட்டில் உள்ள கத்தியை எடுத்து வந்து நெஞ்சில் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சிசிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்
. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் . மேலும் துரை மற்றும் அவரது மனைவி செல்வராணி ஆகியோரை கைது செய்தனர் . இந்த கொலை வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது .
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் நேற்று தீர்ப்பு வழங்கினார் . இதில் துரை மற்றும் அவரது மனைவி செல்வராணிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் , தலா ரூ .400 அபராதமும் , அபராத தொகையை கட்டத்தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.











