மென்பொருியாளர் கவின் ஆணவ படுகொலை தொடர்பாக ஆய்வு செய்ய தமிழ்நாடு ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நல ஆணைய தலைவர் தமிழ்வாணன் நெல்லை, தூத்துக்குடியில் முகமிட்டுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இது ஒரு துயரமான சம்பவமாகும். இந்த கொலை வழக்கை சாதிய பிரச்சினையாக கருதாமல் சமூகப் பிரச்சினையாக பார்க்க வேண்டும். வயது வந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவர்கள் மைனராக இருந்தால் மட்டுமே பிரச்சனை உருவாகும். இப்போது நடந்திருக்கும் ஆணவ கொலையானது மனித சமூகத்திற்கு எதிரானது. எல்லோரது மத்தியிலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
காவல்துறை அதிகாரிகளை சந்தித்து இது குறித்து நாங்கள் பேசியபோது முறைப்படி அவர்கள் அனைத்தையும் செய்திருப்பதாக தெரிகிறது. இது போன்ற கொலை வழக்குகளில் ஜாதி உள்ளே வரக்கூடாது. மனிதமே முக்கியம். மக்கள் மத்தியில் இத்தகைய கொலை வழக்குகள் தொடர்பான விழிப்புணர்வை அனைவருமே ஏற்படுத்த வேண்டும்.
இந்த சம்பவத்தால் இரு குடும்பத்தினரும் கெட்டு நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் அவசியமாகும். இதற்காக ஆணையம் அரசுக்கு அறிவுறுத்தி வருகிறது. இப்போது நடந்துள்ள கொலையில் எஸ்சி எஸ்டி சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற ஜாதியினருக்கு இப்பிரச்சனை வரும்போது தனி சட்டம் தேவையாக உள்ளது.
தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதே ஆணையத்தின் விருப்பமாகும். மேலும் இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாகும். இப்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் முதல் தகவல் அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொண்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.








