தூத்துக்குடி மாவட்டம் வைப்பார், கீழவைப்பார் பகுதியிலிருந்து கடல் மார்க்கமாக கடந்த சில மாதங்களாக கஞ்சா, விரலி மஞ்சள் மற்றும் போதை பொருட்கள் கடத்துவதாக தெரிகிறது.
இதை தடுக்க உள்ளூர் போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை கீழவைப்பாரில் இருந்து வைப்பார் செல்லும் சாலையில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது காட்டுப்பகுதியில் சாலையோரம் கார் ஒன்று நின்றிருந்தது. சந்தேகமடைந்த போலீஸார், அருகே சென்று காரை திறந்து பார்த்தபோது, அதில் 4 மூடைகளில் சுமார் 1 கிலோவிலிருந்து 2 கிலோ அளவிலான 40 பொட்டலங்கள் என மொத்தம் 76 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.7.60 லட்சமாகும். இதனை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், குளத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த கஞ்சா பொட்டலங்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து குளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கஞ்சா ரெய்டின்போது நடந்த சில ’கசாமுசா’க்கள் இப்போது வெளிவந்துள்ளன. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து வந்த போது கஞ்சா ஏற்றிய காரின் அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த இருவர் போலீசாரை கண்டதும் காட்டுப்பகுதியில் ஓடி தப்பித்துத்துள்ளனர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தங்களது டிஎஸ்பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகைப்படத்துடன் தகவலை தெரிவித்தனர்.
இதற்கிடையே திடீரென்று அங்கு வந்த தருவைகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரும் குளத்தூர் காயம் காவல் ஆய்வாளர் பொறுப்பு வகிப்பவருமான முருகன், சம்பந்தமே இல்லாமல், ‘ எங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஏரியாவில் வந்து எப்படி நீங்கள் கஞ்சாவை படிக்கலாம்?’என கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .

தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் இவர் எப்படி இந்த இடத்துக்கு வந்தார் என்ற சந்தேகம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கஞ்சா பொட்டலங்கள் இருந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரை பிடிப்பதில் அவர்களே தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த கடத்தலில் உள்ளூர் போலீசாருக்கு தொடர்பு உள்ளதா? என்றெல்லாம் ஆராய முனைந்துள்ளனர். கடலோர போலீஸ், உள்ளூர் போலீஸ் முட்டல் மோதல் விவகாரம் பற்றிய தகவல் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது .














