குலம் காக்கும் தெய்வங்கள் 12

0
840

சமணர்களின் இல்லற வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறும் சமந்தபத்திர அடிகளின் இரத்தின கண்டகம் என்ற நூலின் உரையில் வேறுபட்ட நீலிக்கதை இருக்கிறது. ஆனாலும், அதுவும் பெண்ணின் கற்பின் திறத்தை விளம்புவதுதான். அதன்படி நீலி, வசுபால மன்னன் ஆட்சி செய்த வடநாட்டின் தலைநகரான பிருகுகச்சத்தில் வாழ்ந்த ஜினதத்தன் என்ற வணிகன் மகள். அதே நகரில் சமுத்திரதத்தன் என்ற வணிகனின் மகனான சாகர தத்தன் என்பவன் அவள்மீது காதல் கொண்டான். ஆனால் சாகரதத்தன் புத்த சமயத்தவன் என்பதால் நீலியின் பெற்றோர் அவனுக்கு மணமுடிக்க மறுத்தனர். வேறுவழியின்றி, சாகரதத்தனும் அவன் பெற்றோரும் சமணர்போல நடித்து நீலியைப் பெற்றனர்.

நீலி திருமணத்துக்கு பின்புதான் இச்சதியை உணர்ந்தாள். ஆனாலும், கணவனுக்குரிய கடமையை செய்துகொண்டே தனது சமணநெறியையும் சரியாக பின்பற்றினாள். புகுந்தகத்தவரோ அவளை புத்த சமயத்தில் சேர வற்புறுத்தினர். ஒரு நாள் புத்ததத்துறவி ஒருவருக்கு உணவு சமைக்கும்படி மாமனார் கட்டளையிட்டார். அந்த புத்த துறவியோ இறைச்சி உண்பவர் (?). அவளோ, உயிர்க்கொலையை கனவிலும் கருதாத சமணநெறியினள்.ஆனாலும், மாமனார் பேச்சை மறுக்காமல், புத்தித்துறவி அணிந்திருந்த தோல் செருப்பில் ஒன்றை எடுத்து இறைச்சி போலவே அருமையாக சமைத்துக் கொடுத்தாள். துறவி விடைபெற்றபோது ஒரு செருப்பை ஒன்று காணாமல் தேட, நீலி அவன் உண்டது செருப்பையே என்ற உண்மையை போட்டுடைத்தாள்.

இதனால் ஆறாச்சினம் கொண்ட கணவனும், மாமன், மாமியரும் அவளை பழி வாங்கும் வகையில் அவளது கற்பின்மீது பழிசுமத்தினர். நீலி பதைபதைத்தாள். தனது கற்பின் திறனை எப்படி விளக்குவது என புரியாமல் திகைத்தாள். அக்காலத்தில் அந்த நகரத்தின் கோட்டைவாயில் அடைபட்டு யாராலும் திறக்க முடியாது போனது. கற்புடைய மங்கை முயற்சித்தால்தான் கதவு திறக்கும் என நம்பி பெண்கள் அனைவரையும் அழைத்தனர். யாராலும் கதவை அசைக்க முடியவில்லை. ஆனால், நீலி சென்று தொட்ட அளவில் அது திறந்தது. அவள்மீது புகுந்த வீட்டார் சுமத்திய பழி நீங்கியது.

மற்றொரு சமண நூலான நீலகேசி பழையனூர் நீலிக்கதையை அப்படியே ஏற்கிறது. கொஞ்சம் கூடுதல் தகவலை தருகிறது.‘பாஞ்சால நாட்டில் உள்ள புண்டவர்தனம் என்ற ஊரில் சுடுகாட்டில் உயிர்ப்பலி இடுவதை முனிச்சந்திரன் என்னும் சமண அறிஞர் தடுத்தார். அதனால் கோபம் கொண்ட காளி பழையனூர் நீலியை அவர் மேல் ஏவினாள். நீலி அவரை வழிமறித்தாள். தன் அழகை காட்டி மயக்க முயன்றாள். ஆயிரம் கரங்களால் பயமுறுத்தியும் பார்த்தாள். இவையெலலாம் முனிசந்திரரை எதுவும் செய்யவில்லை.

அவர் நீலியை நோக்கி “அருகரின் நாமத்தைச் சொல்”. என்று கூற அவள் அடங்கி, அழகிய சிறுபெண்ணாக மாறி அவர்முன் நின்றாள். சிறுமியை சிஷ்யையாக சேர்த்துக்கொண்ட முனிசந்திரர் அவளைத் தன் குகைக்கு அழைத்துச் சென்று சமண ஞானம் கற்பித்தார். அதன்பிறகு நீலி நீலகேசியாக, சமணத்துறவியாக மாறி மதுரையிலும் புகாரிலும் காஞ்சியிலும் சென்று பிற மதத்தைச் சேர்ந்தவர்களிடம் சமணக் கருத்துகளை முன்வைத்து விவாதித்து வென்றாள்‘ என்று நீலகேசி கூறுகிறது.

கன்னடத்தில் ‘கரிராஜன் கதை’ என்ற பெயரில் நீலிக்கதை வருகிறது. ஆனால் நீலியின் பெயர் இராட்சசி. தொண்டனூரின் அரசியான இராட்சசியின் மகளை கரிராஜன் கவர்கிறான். அவனை கொல்ல இராட்சசி அலைகிறாள். மல்லிகையூரில் அவனை பிடித்து விடுகிறாள். அந்த ஊரின் 12 கவுடர்களிடம் கரிராஜன் தன் கணவன் எனக்கூறி நீலையைப் போலவே நடிக்கிறாள். அதன்பின் கரிராஜனை கொன்று சபதம் முடிக்கிறாள்.

மலையாள மொழியில் ‘உண்ணு நீலி சந்தோசம்’ என்னும் பெயரில் நீலி கதை உள்ளது. தலைவனும் தலைவியும் ஒன்றாக உறங்கிக் கொண்டிருந்தபோது, யட்சி ஒருத்தி தலைவனை மட்டும் மந்திர ஆற்றலால் தூக்கிக் கொண்டு வானில் பறக்கிறாள். ஒருகட்டத்தில் தலைவன் நரசிம்ம மந்திரத்தை உச்சரிக்க, யட்சி பயந்துபோய் அவனை கீழே போட்டுவிடுகிறாள். அவன் திருவனந்தபுரத்தில் விழுகிறான். பின்பு தலைவன் தலைவிக்கு தூது அனுப்புகிறான் என்பது கதை. இங்கு நீலியை யட்சி என்பதும், அவள் தலைவனை வானிலிருந்து வீசுவதும் நீலியின் சாயலை கொடுக்கிறது.

இரத்தின கரண்டகத்தின் நூலாசிரியரான சமந்தபத்திர சமண அடிகள் பிறப்பால் தமிழ் நாட்டவர். கிபி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரது கற்பு நெறி கொண்ட பெண்ணின் கதை நமது பண்பாட்டின் அடிபப்டையில் போற்றப்பட்டிருக்க வேண்டும். பின்னாளட்களில் வந்த ஞானசம்பந்தர் சைவ சமய சித்தாந்தத்துக்கேற்ப நீலியின் தன்மையை சைவ வழிபாட்டின் ஓரம்சமான பேய்த்தன்மைக்கு மாற்றியிருக்கவேண்டும். அவர் காலத்துக்கு பின் வந்த ‘நீலகேசி’ ஆசிரியர் ஞானசம்பந்தரின் நீலியை அப்படியே ஏற்று அவளுக்கு சமண சாயலை கொடுத்துள்ளார். மேலும், நீலி கிபி 2ம் நூற்றாண்டுக்கு முன்பே தெய்வமாக வணங்கப்பட்டதை சிலப்பதிகாரம் மூலம் உணரலாம். நீலி தெய்வம் கொடுத்த சாபத்தாலேயே கோவலன் கண்ணகியை பிரிந்து கொலைக்களம் புகுந்தான் என்பார் இளங்கோவடிகள்.

தமிழகத்தில் சமணம் பரப்பப்பட்டபோது மஹாவீரருக்கு துணையாக அம்பிகைகள் காவல் இருப்பதாகக் கூறப்பட்டது. அப்படி ஒரு நீலாம்பிகை தான் நீலியாக கருதப்பட்டிருக்கவேண்டும் என்பாரும் உளர்.
சமணர்கள், உலகில் எதுவுமே சுயம்புவாக தோன்றியதில்லை. பொருட்களின் உருமாற்றம் தான் நடக்கிறது. மலை தேயும்போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும் என்பார்கள். பெளத்த, சமண சித்தாந்தமான சூன்ய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்தபோது சமணத் துறவிகள் துன்புறுத்தப்பட்டனர். இந்த காலகட்டத்தில்தான் நீலகேசி அத்வைதிகளை எதிர்த்து வாதிட்டுவந்தாள். ‘நடு இரவில், நடுவீதியில் எவருக்கும் தெரியாமல் ஒருவர் மலம் இருந்து சென்றால், காலையில் எழுந்து பார்க்கும் நீங்கள் அதை சுயம்பு, கடவுள் படைத்தது என்று சொல்லுவீர்களா ?’ என்று கேட்டாள். இதனால் அவமானமடைந்த அத்வைதிகள் மன்னரின் ஆதரவுடன் மரணதண்டனை பெற்றுக்கொடுத்தனர். தண்டனை வழங்க இழுத்துச் சென்றபோது அவள் கண்ணீர் விட்டு சபித்தாள். அதைப் பார்த்து ‘எதற்கும் கலங்காத நீலியே கண்ணீர் வடிக்கிறாள்’ என்று சுற்றி நின்றவர்கள் அகம்பாவமாக சிரித்தனர். அதுமுதல் சமணர்களளை தண்டிக்கும்போது அவர்கள் வடிக்கும் கண்ணீரை ‘நீலிக்கண்ணீர் ’ என்று கேலி செய்ய தொடங்கிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here