கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு ஆடிட்டர் ரமேஷின் படத்துக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கான ஆதாரங்களை பாஜகவினர் திரட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகள், தேவைகள் மற்றும் கோரிக்கைகளை தற்போதைய மாநில அரசு எப்படி நிறைவேற்றுகிறது என்பதை பொறுத்தே கொங்குநாடு குறித்து பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்றார்.













