சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது சரக்கு வாகனம் ஒன்று சந்தேகப்படும் வகையில் சரக்குகள் ஏதுமின்றி காலியாக வந்துள்ளது.
முதலில் சோதனை செய்து பார்த்ததில் சரக்கு எதுவும் இல்லாதது போல் இருந்த நிலையில், வாகனத்தில் உள்ளே சென்று அதிகாரிகள் சோதனை செய்ததில் சரக்கு வாகனத்திற்குள் உருவாக்கப்பட்ட ரகசிய அறை ஒன்றில் 327 கிலோ கஞ்சா 150 காக்கி நிற பாக்கெட்டுகளில் வைத்து கடத்தப்படுவதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர் கொடுங்கையூரைச் சேர்ந்த டுபாஷ் சங்கர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திரா அன்னாவரம் பகுதியிலிருந்து தமிழ்நாடு வழியாக கேரளா திருவனந்தபுரத்துக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. கைதான டுபாஷ் சங்கர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு, கேரள எல்லையில் கஞ்சாவை வாங்க காத்திருந்த நபர் குறித்து கொச்சின் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கொச்சின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாடு கேரள எல்லையில் களைக்காவல என்ற இடத்தில் ஸ்ரீநாத் என்ற நபரை கைது செய்தனர். அவனிடம் விசாரணை செய்ததில் அவன் கேரளா விழிஞ்சம் பகுதியில் கடந்த 4 வருடமாக வெகு விமர்சையாக கஞ்சா விற்பனை செய்த முக்கிய கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன் என தெரியவந்தது. தற்போது கைதான 2 பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களில் இரண்டாவதாக செய்யப்பட்ட மிகப்பெரிய கஞ்சா பறிமுதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.














