கழுகுமலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக கழுகுமலை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில், தலைமை காவலர் சுப்புராஜ், காவலர் பால்தினகரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கழுகுமலையில் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கழுகுமலை ஊருக்குள் வந்த ஈச்சர் வாகனத்தை (407 வாகனம்) நிறுத்தி சோதனையிட்டபோது, அதன் டிரைவர் மற்றும் கிளீனர், வாகனத்தில் சிப்ஸ் உள்ளது என முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதில் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தில் சோதனையிட்டபோது, அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 30 மூடைகள், பான்மசாலா 6 மூடைகள் என மொத்தம் 36 மூடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9லட்சத்து30ஆயிரம்.

இதையடுத்து, அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, கர்நாடகா மாநிலம், பெங்களூர், பொம்மசந்திரா என்ற இடத்தில் இருந்து கழுகுமலை ஆறுமுக நகரைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் சந்திரசேகர் என்பவருக்குச் சொந்தமான குடோனில் பொருட்களை இறக்கி வைப்பதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, டிரைவர் சேலம் மாவட்டம், கடையம்படி தாலுகா, மாமரத்தூரைச் சேர்ந்த முருகன் மகன் சீனிவாசன்(36), கிளீனர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, மூளக்காடைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மாது(37) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் ஈச்சர் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், கழுகுமலை எஸ்.ஐ., காந்திமதி தலைமையிலான தனிப்படையினர், குடோன் உரிமையாளர் சந்திரசேகரை தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி டி.எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாவட்ட எஸ்.பி., ஜெயகுமார், கோவில்பட்டி டி.எஸ்.பி., கலைகதிரவன் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பார்வையிட்டனர்.
பின்னர், எஸ்.பி. ,ஜெயகுமார் , செய்தியாளர்களிடம் கூறியதாவது ; “இந்த வருடம் மட்டும், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக 684 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 687 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. மேலும், 3,800 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 305 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 47 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 75 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இளைஞர்களை குறி வைத்து, புகையிலைப் பொருட்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
மேலும், பெங்களூரில் இருந்து கழுகுமலைக்கு வரும் வழியில் உள்ள வேறு ஏதாவது ஊர்களில் புகையிலைப் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது”.
இவ்வாறு எஸ்.பி., கூறினார்.







