நெல்லையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் , ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மாநகர காவல்துறை சார்பில் முதுமக்கள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் தனியாக இருக்கும் வயது முதிர்ந்த தம்பதிகள் , தனிநபர்கள் , ஆதரவற்றோருக்கு உதவி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நெல்லை டவுண் பாறையடியில் வேர்களைத் தேடி திட்டத்தை மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் சீனிவாசன், மகேஸ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர் . முதல்கட்டமாக 80 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் , பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
மாநகர் பகுதியில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏற்கனவே கொரோனா ஊரடங்கை கண்காணிக்க 20 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் இந்த பணியை மேற்கொள்கின்றனர் .5 நபர்களுக்கு ஒரு காவலர் என நியமிக்கப்பட்டு இவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீடுகளில் தனியாக இருக்கும் வயது முதிர்ந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான பொருட்கள் , மருந்து மாத்திரைகள் , மளிகைச் சாமான்கள் , உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வர்
மேலும் உதவி வேண்டுவோர் 9498181200, மற்றும் 0462 2562651 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என காவல் உதவி ஆணையர்கள் தெரிவித்தனர் .
கடந்த ஆண்டு ஊரடங்கின் போது வீடுகளில் தனியாக இருக்கு வயது முதிந்த தம்பதியர் , ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் வகையில் காவல்துறை சார்பில் வேர்களைத் தேடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.









