சென்னை கானாத்தூரில் உள்ள முட்டுக்காடு பகுதியில் நீலாங்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி போலீசார் விசாரணை செய்தனர்.விசாரணையில் முரணாக பதிலளித்ததால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்த போது ஏராளமான ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஸ்கிம்மர் மிஷின்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காரில் வந்த மூவரிடமும் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.மூவரும் திருச்சியை சேர்ந்த லாவா சந்தன்(30), பிரவீன் கிஷோர்( 30) மற்றும் திண்டுக்கலை சேர்ந்த சிக்கேந்தர் பாதுசா(37) என தெரியவந்தது.அதில் லாவா சந்தன் என்பவர் ஏடி.எம் மையங்களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி பொதுமக்களின் தகவல்களை திருடி, போலி ஏடிஎம் கார்டை தயாரித்து பணம் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்தது.
இவரை கோயம்புத்தூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்ததும் தெரியவந்தது.இதனையடுத்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த லாவா சந்தன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிக்கேந்தர் என்பவர் இந்தியாவில் பல இடங்களில் மசாஜ் சென்டர் மற்றும் பெட்ரோல் பங்குகளில் பணியாற்றி இருப்பதும்,அங்கு பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகள் மற்றும் மசாஜ் செய்ய வரும் வாடிக்கையாளர்கள் ஏடி எம் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது ஸ்வைபிங் மிஷினில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி தகவலை திருடி,போலியான ஏடி.எம் கார்டுகளை உருவாக்கி வங்கி கணக்கிலிருந்து பல லட்சம் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
மேலும் திருடிய பணத்தை சிக்கேந்தர் பிட்காயின் போன்ற ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சம்பாதித்த பணத்தை கூட்டாளிகளுடன் பங்கு பிரித்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் போலியான ஏடி எம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.











