நம் நாட்டில் 29,900 கோடி டன் அளவிற்கு நிலக்கரி வளம் உள்ளதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதில் 12,300 கோடி டன்னை உற்பத்தி செய்து, உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நிலக்கரி வளம் 100 ஆண்டுகளுக்கு போதுமானது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அனல்மின் நிலையங்களில் நிலக்கரி முக்கிய எரிபொருளாக இருக்கிறது. உள்நாட்டில் நிலக்கரி வளம் அதிகமாக இருந்தாலும் தேவையை ஈடு செய்யும் வகையில் உற்பத்தி இல்லாததால் அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது.
உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் முதல் இரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. எனினும் உலக நிலக்கரி துறையில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாதான் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் செல்வாக்கு பெற்று வந்தாலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு (2030 வரை) மின் துறையில் அனல் மின் திட்டங்களின் பங்கு 50 சதவீதமாக இருக்கும் என்பதால் நிலக்கரியின் ஆதிக்கமும் அதுவரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.














