இப்போதெல்லாம் முகமறிய நபருக்கு ஆன்லைனில் சரக்கு அனுப்பி பண ம்வாங்கிவிடுகிறார்கள். அதற்கு உரிய முகவர், முகவரி, இணைய தொடர்பு வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் இல்லாமல் வெறும் தொலைபேசி ஆர்டரை நம்பி முகமறியா நபருக்கு சரக்கு கொடுத்து ரூ.62 ஆயிரத்தை இழந்து நிற்கிறார் ஒரு எலெக்ட்ரானிக் கடைக்காரர். ’ஆண்பாவம்’ படப்பாணியில் நடந்த இந்த ’ அண்ணாச்சிபாவம் ‘ சம்பவம் இதோ:
கோவை சுக்ரவார் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் சுரேஷ்குமார் (42). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது கடைக்கு போன் செய்த ஒருவர் தனது பெயர் கார்த்திக் என்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினியர் என்றும் சில எலக்ட்ரிகல் பொருட்கள் வேண்டுமென்றும் ஆர்டர் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பொருட்களை ஆட்டோ மூலம் அனுப்பி வைக்கும்படியும், ஆட்டோ டிரைவரிடம் பணம் கொடுத்து விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அதை நம்பி, சுமார் 61 ஆயிரத்து 696 ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருள்களை ஆட்டோ டிரைவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் அனுப்பி வைத்துள்ளார் .கோவை ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் பகுதிக்கு வரச்சொன்ன கார்த்திக் என்ற தொலைபேசி மர்ம நபர், பொருள்களை தனது ஸ்கூட்டரில் ஏற்றுக்கொண்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கடை உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கடை உரிமையாளர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.
நூதன முறையில் பொருட்களை லவட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.













