அவசர கர்ப்பம் கலைந்தது: இனியாவது இந்திய அரசியலில் நியாயம் பிறக்குமா?

0
684

போலி ஜனநாயகத்தில் ஆட்கடத்தல், குதிரை பேரம், சலுகை வலை வீச்சு எல்லாம் புதிதல்ல என்றாலும், எல்லா ராஜதந்திரங்களின் (?) தொகுப்பாக மகாராஷ்டிர ஆள்பிடி அரசியல் அவலம் அமைந்துவிட்டது.
அரசியல் கட்சிகளின் ஒப்பந்தம் ஒன்றும் தலையணை மந்திரம் அல்ல. இரு கட்சிகள் கூட்டு சேர்ந்து போட்டியிடும்போது அதற்கான நிபந்தனைகளை அவர்கள் தெளிவுபடுத்துவதோடு, பொதுமக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். ஏனெனில், மக்கள் நன்மைக்காகவே அந்த கூட்டணி.
ஆனால், பாஜக & சிவசேனா கட்சிகள் கூட்டணி நிபந்தனைகள் வெளியே தெரியாததால் அவர்கள் நடத்திய 50க்கு 50 அடி, பிடி தகராறில் யார் பக்கம் நியாயம் என்பது புலனாகவில்லை. என்றாலும், சிவசேனா அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கே முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். பதவி ஆசை யாரை விட்டது? 56 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள சிவசேனா 105 எண்ணிக்கையுள்ள பாஜகவுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்காமல் வெளீயேறி அரசியல் குழப்பத்தை தொடங்கி வைத்தது.
அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை, எதிரியுடன் சேர்ந்தும் பதவியை பிடிக்கவேண்டும் என வெறியாய் அலைந்தது. காங்கிரஸ் முதலில் அலட்டிக்கொள்ளாவிட்டாலும் தேசியவாத காங்கிரஸ் அடி மேல் அடிக்க கொஞ்சம் அசைந்துகொடுத்தது. அவர்கள் தாமதத்தை சாதகமாக்கி, ஆளுநர் அரசியல் செய்ததன் விளைவே குடியரசு தலைவர் ஆட்சி.
அவர் பாஜகவுக்கு அளித்திருந்த அவகாசத்தை சிவசேனாவுக்கு அளித்திருந்தால் முட்டல், மோதலின்றி ஆட்சி அமைந்திருக்கும். அதன்பின்னும் பதவி பேரத்துக்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் பதவி பேரத்துக்காக காலநேரத்தை காலி செய்தன.
அவர்கள் ஒற்றுமையை கண்ட பாஜக அமைதி காத்திருக்கலாம். ஆனால், காத்திருப்பவன் மனைவியை நேற்று வந்தவன் கொண்டு செல்வதா என்ற ஆத்திரத்தில் அரசியலின் அடிமட்ட திட்டம் ஒன்றை தீட்டியது. தேசியவாத காங்கிரசை பிளந்து அஜித் பவாரை கொண்டுசென்றது.
இதுவரை எங்கும் இல்லாதவாறு அறிவிப்பே அற்ற ரகசிய அதிகாலை பதவியேற்பை காதும் காதும் வைத்தாற்போல் நடத்தியது. அத்துடன் அஜித் பவாரின் ஊழல் வழக்கையே ஆட்சிக்காக கைவிடவும் முன்வந்தது. ஆனால், நீதிமன்றத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தொடுத்த வழக்கும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் இறுதிநேர கட்சி விசுவாசமும் ஓரளவு பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவந்தன.
மூன்றுகட்சி எம்.எல்.ஏக்களும் சுயேட்சை எம்.எல்.ஏக்களுமாக 162 பேர் பத்திரிகையாளர்கள் முன்பு தோன்றி தங்கள் ஒற்றுமையை நிருபித்ததையடுத்து வேறு வழியின்றி அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இதையடுத்து மும்பையில் பேட்டியளித்த பட்னவிஸ், ‘ பாஜக சிவசேனா கூட்டணிக்கே மக்கள் வாக்களித்தனர். சிவசேனாவை விட பாஜகவே அதிக இடங்களை கைப்பற்றியது. பெரும்பான்மை கிடைக்காததல சிவசேனா மிரட்டத் தொடங்கியது. சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்படவில்லை. சிவசேனா & காங்கிரஸ் & தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கொள்கைக்கு முரணான கூட்டணி. துணை முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது என்று அஜித் பவார் கூறிவிட்டார்’ எனக்கூறி பட்னவிசும் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.
பாஜக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் இது புதிதல்ல. ஆனால், பொம்மை பதவியில் இருக்கும் ஆளுநர் நினைத்தால் மக்கள் கருத்துக்கு மாறான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்ற தவறான எடுத்துக்காட்டு இனியாவது முடிவுக்கு வரவேண்டும். தேர்தலுக்கு பின்பு பொருந்தாக்கூட்டணி அமைத்தும் மக்களை ஏமாற்றக்கூடாது. ஏனெனில், தேர்தலின்போதுள்ள கூட்டணி குறித்தே மக்கள் வாக்களித்தனர். எத்தனை சீட்கள் இதுவரை நடந்த நூற்றுக்கு மேற்பட்ட ஜனநாயக படுகொலைகளில் இதுவாவது இறுதி கொலையாக இருந்தால் நம் இளைஞர்களுக்கு இந்தியா மீது நம்பிக்கை பிறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here