கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட குறிச்சி குளக்கரை பகுதியில் ரூ.52 கோடி மதிப்பில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இதில், 2 நாள்களில் 70 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் 275 வீடுகளுக்கு வீடுகளை காலி செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
குறிச்சி குளக்கரையை ஒட்டிய பகுதியான சதாம் நகரில் உள்ள 95 ஆக்கிரமிப்பு வீடுகளில், 70 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 25 வீடுகள் அடுத்த வாரம் இடிக்கப்பட உள்ளன. அதேபோல திருவள்ளுவா் நகரில் உள்ள 180 வீடுகள், காந்தி நகரில் உள்ள 95 வீடுகளுக்கு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. இவா்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, வெள்ளலூா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. நோட்டீஸ் வழங்கப்பட்ட வீடுகளை வருகின்ற 27 ஆம் தேதிக்குள் காலி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகள் மீண்டும் நடைபெறும்.














