சென்னை அமைந்தகரை மேத்தா நகர் திருவள்ளுவர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் இம்ரான் (25). இவரது தாயான் சுலேகா மலேசியாவில் உள்ளார். இம்ரான் அமைந்தகரையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மலேசியாவில் உள்ள இம்ரான் தாய் சுலேகாவை தொடர்பு கொண்ட சிலர், அவர் மகனை கடத்தி விட்டதாகவும், விடுக்க வேண்டும் என்றால் 50 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், தவறினால் இம்ரானை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்து போன இம்ரான் தாய் சுலேகா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் சூளைமேடு போலீசார் விசாரிக்குமாறு உத்தரவிட்டார். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இடம் அமைந்தகரை காவல் நிலைய பகுதிக்குள் வந்ததால், அமைந்தகரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடத்தல்காரர்கள் செல்போன் எண்ணை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை போலீசார் கண்டு பிடிக்க முயன்றபோது கடத்தல்காரர்கள் மேத்தா நகர் பகுதியில் சுற்றி திரிவது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் இம்ரான் தங்கியிருந்த அடுக்குமாடி வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் தேடியுள்ளனர். இதற்கிடையே, இது தொடர்பாக இம்ரானின் தாய் சுலேகா தன் மகனுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் விசாரித்தபோது, இம்ரான் கொடுக்க வேண்டிய பணத்திற்காக மூன்று நபர்கள் அழைத்துச் சென்றதாக கூறியுள்ளனர். ஹோட்டல் வியாபாரம் செய்வதற்கு 5 லட்ச ரூபாய் பணத்தை கல்லூரி நண்பர்களிடம் இம்ரான் வாங்கியதாகவும், அதை திருப்பிக் கொடுக்காததால் அழைத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. போலீசார் தீவிரமாக தன்னை தேடுவதை அறிந்த இம்ரான், பயந்து தனது தாயிடம் போன் செய்து உண்மையை தெரிவித்தார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும், ஹோட்டல் ஆரம்பிப்பதற்கு தேவையான பணத்துக்காகவும் இதுபோன்று நாடகம் ஆடியதாக கூறினார்.
இம்ரானை அழைத்துச்சென்ற நபர்களும் சுலேகாவிடம் தாங்கள் கடத்தி செல்லவில்லை என தெரிவித்ததையடுத்து அவரது தாய் சுலேகா காவல் துறையினருக்கு போன் மூலமாக நடந்த உண்மையை தெரிவித்து வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இருப்பினும் இம்ரான் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு நேரடியாக வரவேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.