கிணத்துக்கடவு எஸ்.எம் .பி. நகர் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரின் மகன் பென்னட் ராஜன்( 47) .இவர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் .இவரது தங்கை கணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக நேற்று முந்தினம் இரவு பென்னட் ராஜன் தனது பைக்கில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவர் பென்னட் ராஜனிடம் லிப்ட் கேட்டு உள்ளார். தன்னை வீரபாண்டி பிரிவு பகுதியில் இறக்கி விடுமாறு கூறியுளளார்.
இரவு நேரம் என்பதால் வேறு வாகன போக்குவரத்து இல்லை என்ற காரணத்தினால் பென்னட் ராஜன் அந்த நபரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றார்.
வீரபாண்டி பிரிவு அருகே வந்த பொழுது பென்னட் ராஜன் பைக்கை நிறுத்தி அந்த நபரை இறங்கி கொள்ளுமாறு கூறினார். அதற்கு பைக்கில் பயணம் செய்த நபர் தன்னை வீட்டில் சென்று இறக்கி விடுமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் பைக்கில் பயணம் செய்த நபர் தலைமையாசிரியர் பென்னட் ராஜனை தாக்கத் தொடங்கினார். மேலும் சாலையில் கிடந்த கற்களை எடுத்து வீசி எறிந்தார். இதில் பென்னட் ராஜனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் தலையிட்டு கற்களை வீசி எறிந்த நபரை பிடித்தனர்.
பின்னர் இதுகுறித்து நடராஜன் பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பின்னர் பென்னட் ராஜன் லிப்ட் கொடுத்து ஏற்றிவந்த நபர் ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் கன்னியப்பன் என்கிற ராஜா (32) என்பது தெரியவந்தது. லிப்ட் கேட்டு வந்த கன்னியப்பன் மதுபோதையில் இருந்ததும் பென்னட் ராஜனை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.









