கோவை குனியமுத்தூா் பகுதியில் போதை மாத்திரை விற்றதாக 4 பேரை போலீஸாா் நேற்று இரவு கைது செய்தனா்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் பக்கத்து மாவட்டங்கள், அண்டை மாநிலங்க ளிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தனர் .இந்த கும்பலை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி கைது செய்து அவர்களிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் கோவை நகரில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை குறிவைத்து கஞ்சா விற்பனை, போதைமருந்து விற்பனை ஒருபுறம் நடந்துகொண்டிருந்தது. குறிப்பாக கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இதுபோன்ற போதைக்கு அடிமையாகி இருந்து வருகிறார்கள்.
.இவர்களை குறிவைத்து விற்பனை செய்யும் கும்பல் ஒரு கட்டத்தில் இந்த போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்களை விற்பனையாளர்கள் ஆக மாற்றி அவர்களது நண்பர்களுக்கும் இதை விற்று வருகின்றனர். தினமும் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

அதேபோல கடந்த வாரத்தில் போதை மாத்திரை கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டது. வலி நிவாரணி மாத்திரைகளை கரைத்து அதை சிரன்ஞ் மூலம் செலுத்தி போதை ஏற்படும் விதமாக பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வலிநிவாரணி மாத்திரைகள் மற்றும் போதையை உண்டாக்கக்கூடிய மருந்து வகைகளை மருந்து கடைகளில் டாக்டர்களின் உரிய சீட்டு இல்லாமல் இருக்கக்கூடாது என ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் மீறி கோவை நகரில் போதை மாத்திரை விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில்
கோவை ஆத்துப்பாலம், சாரமேடு, கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் குனியமுத்தூா் போலீஸாா் நேற்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, குனியமுத்தூா் கரும்புக்கடை ஆசாத் நகா் பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை பொடியாக்கி அவற்றை விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சோ்ந்த முஹமது யாசா் (22), முஸ்தபா(24), முஹமது (22), மற்றொரு முஸ்தபா (20) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
இந்த கும்பலுக்கு வேறு யாரேனும் போதை மாத்திரைகள் சப்ளை செய்கிறார்களா இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.














