சூலூர் அடுத்த மைலம்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் சீனிவாசன் (46) இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 14ஆம் தேதி தனது இளைய சகோதரியின் மகள் திருமணத்திற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு பழனிக்கு சென்றார். திருமணம் முடிந்து மீண்டும் கடந்த 30ஆம் தேதி வீட்டிற்கு வந்து இருந்துவிட்டு மீண்டும் புதுமண தம்பதிகளை திருப்பூரிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக நேற்று குடும்பத்தாருடன் மீண்டும் வெளியே சென்றார்.
பிறகு மாலை 4:30 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து குடும்பத்தாருடன் வீட்டிற்கு திரும்பினார் .அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கு பவுன் நெக்லஸ் மற்றும் 5 பவுன் மோதிரங்கள், கம்மல்கள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ரணர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் கைவிரல் ரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.