மதுரை சிந்தாமணி பகுதியில் இளவயதிலேயே கணவரை இழந்த பாக்கியம் என்ற பெண்மணி தனது 3ஆண் பிள்ளைகளை வளர்த்து ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை மூத்த மகன் குமார் 18வயது முழுமையடாத சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதற்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குமார், அவரையும் தனது இளைய சகோதரர் நாகராஜையும் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
அங்கிருந்து தப்பிய தாய் தனது இளைய மகன் உடன் மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து, குழந்தை திருமணம் செய்த மூத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்துநிறுத்தி விசாரணை நடத்துவதற்காக தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தாயின் புகாரையடுத்து போலிசார் பாக்கியத்தின் மூத்த மகனை தேடி வருகின்றனர்.
ஊரடங்கு காலங்களில் பள்ளிபயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் அதிகரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் தனது மகனின் குழந்தை திருமணத்தை கண்டித்த தாயையே மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














