அயோத்தி தீர்ப்பு: தலைவர்கள் கருத்து

0
1444

அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள பிரதமர் மோடி, ‘ அயோத்தி தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது. எல்லா மதத்தினரும் எல்லா சமுதாயத்தினரும் அயோத்தி தீர்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்’ என்றார்.
ராகுல் காந்தி, ‘நீதிமன்றத்தின் இந்த முடிவை மதித்து, நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். இந்தியர்களாகிய நாம் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டிய நேரம் இது’ என்றார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ‘ தீர்ப்பை வெற்றி, தோல்வியாக பார்க்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின், ‘ நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் தீர்வைக் கண்டுள்ளது. விருப்பு, வெறுப்புக்கு உட்படுத்தாமல் சமமான சிந்தனையுடன் தீர்ப்பை ஏற்க வேண்டும்’ என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ‘ உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலோ ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட சமரசத் தீர்ப்பாகவே தெரிகிறது.
ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அறக்கட்டளை நிறுவ வேண்டும் என்பதைப் போல பாபர் மசூதி கட்டவும் ஏன் அறக்கட்டளை நிறுவக் கூடாது? இஸ்லாமியர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைக்கவில்லை எனில் இந்து அமைப்புகள் என்ன ஆவணங்கள் ஒப்படைத்தனர் என்ற கேள்வி எழுகிறது.
சாஸ்திரங்கள் அடிப்படையில் இந்துக்களின் நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து மொத்த இடத்தையும் இந்துக்களுக்கே வழங்கி இருப்பது அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகிறது’ என்றார்.
‘தீர்ப்பை விமர்சிக்கவேண்டாம்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியனும், ‘அயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்காக அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்’ என நடிகர் ரஜினியும் தெரிவித்துள்ளனர்.
ம.ம.க. சார்பில், ‘ சட்டத்தின் அடிப்படையில் வழஙகாமல் நம்பிக்கையின் அடிப்படையில் 2.27 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்கிறோம் என்பது முரண்பாடுகள் நிறைந்த தீர்ப்பு’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here