எங்கும் எதிலும் செல்பி

0
1049

1839ல் பிரபல அமெரிக்க புகைப்படக்கலைஞர் ராபர்ட் கொரனலிஸ் தனது டாகுரோ டைப் காமிராவில் ஒரு படம் எடுக்க நினைத்தார். அப்போது லென்ஸ் மூடி கழறாததால் காமிராவுக்கு முன்னால் வந்து நின்று முயற்சித்துள்ளார். எப்படியோ மூடியை கழற்றி விட்டு பார்த்தால் அவர் புகைப்படம் காமிராவில் பதிவாகியிருந்தது. இதுதான் பிற்காலத்தில் தமைத்தாமே படம் எடுக்கும் செல்பி என்னும் தாமி, தம்படம், சுயமியானது.
செல்ப் போர்ட்ரைட் (தன்னைத்தானே படம் எடுத்தல்) என்பதன் சுருக்கமே செல்பி. இப்படி தம்படம் எடுத்து தம்பட்டம் அடித்துக்கொள்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.
அந்தக்காலத்தில் ஒருவர் தன்னை படமெடுப்பது படிக்கப்போகும்போதோ, வேலையில் சேரும்போதோ நடக்கும் சிறு சம்பவம். சிலவேளைகளில், அவர்கள் கலந்துகொள்ளும் விழாக்களில் யாராவது படமெடுத்தால் உண்டு. ஆனால், செல்பி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, நின்றால், நடந்தால், தும்மினால், சிரித்தால் படமெடுப்பதோடு, அதை பிறர் காண சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொலையாய் கொல்வதும் இயல்பாகிவிட்டது.
செல்பியை எப்போதுதான் எடுப்பது என்ற விவஸ்தையில்லாததால் அதற்கேற்ற விலையை கொடுக்கவேண்டியதும் இருக்கிறது. சென்னையைச் சேர்ந்தவர் நவீத் அகமது கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் வந்த நால்வரால் கடத்தி, தாக்கப்பட்டார். அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி. அகமதுவிற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கும் நட்பு இருந்துள்ளது. சமீபத்தில் அப்பெண் சென்னை வந்து அகமதுவுடன் அண்ணா நகரில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். அப்போது அமெரிக்கப் பெண்ணுடன் அகமது நெருக்கமாக செல்பி எடுத்துள்ளார். அதை அழிக்குமாறு அப்பெண் வலியுறுத்தியும் கேட்காததால், தனது ரவுடி நண்பர்கள் மூலம் அகமதுக்கு இந்த பரிசை அளித்துள்ளார்.
புதிதாக ஒருவரை பார்த்தால், புதிய இடத்துக்கு சென்றால், ஏன், பழைய நண்பர்கள் சந்தித்தால் கூட செல்பிதான் முதல் சம்பிரதாயமாக இருக்கிறது.
செல்பி என்பது தம்மை பிரதிபலித்தல் என்பதோடு, தம்மவர்களுடன் உள்ள உறவை வெளிப்படுத்தும் என செல்பியாளர்கள் நம்புகின்றனர். நட்பை வலுப்பட்டுத்தவும் செல்பியை ஆயுதமாக்குகின்றனர். காதலர்கள் சும்மாயிருப்பார்களா, தாங்கள் அன்றாடம் செய்யும் சேட்டைகளை, சுட்டித்தனங்களை செல்பியாக அனுப்பி சந்தோஷப்பட்டுக்கொள்கின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி நாடு திரும்பிய விமானப் படையின் விங் கமாண்டர் வர்த்தமான் அபிநந்தன், ஆபத்து மீண்டதும் செய்த முதல் வேலை தன் நண்பர்களை சந்தித்து செல்பி எடுத்ததுதான்.
பொது இடத்தில் மிகவும் சீரியசாக நின்று செல்பி எடுப்பது அப்பகுதியில் செல்வோரை முகம் சுளீக்கச்செய்வது வேறு விடயம், இதனால் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. செல்ப் மரணத்தைவிட (தற்கொலை) செல்பி மரணம் (தாமி கொலை) அதிகரித்துள்ளது.
சாவகாசமாக இருந்த படம் எடுக்கும் வேலையை ஆபத்து நிறைந்த சாகசமாக மாற்றியது செல்பி. அருவியில் குளித்துக்கொண்டே ‘செல்பி’ எடுப்பது, ஓடும் வாகனத்தின் முன் சென்று ‘செல்பி’ எடுப்பது என முன்னேறி, மலை உச்சியின் விளிம்பில் ஒற்றைக்காலை தூக்கிவைத்து செல்பி எடுப்பது வரை போயிருக்கிறது.
கடந்த மார்ச்சில் கேரள மாநிலம் அம்பலப்புழை புன்னக்காடு தேவி கோயில் வளாகத்தில் கட்டப்பட்டிருந்த யானையின் அருகில் சென்று செல்பி எடுத்த ரெனீஸ் (40) என்பவரை அது தந்தத்தால் குத்தி, தும்பிக்கையால் தூக்கி வீசியது.
சன்னி, சாமன், கிஷன், தினேஷ் ஆகிய 4 பேரும் உறவினர்கள். 18 முதல் 20 வயதானவர்கள். டெல்லி-அம்பாலா வழித்தடத்தில் உள்ள பூங்காவின் பின்புறம் இருந்த ரெயில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ படம் எடுக்க அவர்களுக்கு ஆசை. அதற்கான முயற்சி செய்தபோது அதிவேகமாக ஒரு ரயில் வந்தது. இதனால் பதற்றம் அடைந்தவர்கள் அந்த தண்டவாளத்திலிருந்து இடது புறமிருந்த தண்டவாளத்துக்கு தாவினர். தினேஷ் மட்டும் வலது புறத் தண்டவாளத்தில் குதித்தார். மூன்றுபேர் ஒன்றாக குதித்த தண்டவாளத்தில் டெல்லி-கல்கா பயணிகள் ரயில் அதிவேகமாக வந்ததை கவனிக்கவில்லை. அவர்கள் மீது அந்த ரயில் மோதித்தள்ள, உடல் சிதறி இறந்தனர்.
ரயில் நிலையம் செல்பி ரசிகர்களின் ஹாட் ஸ்பாட்டாக இருக்கிறது. தண்டவாளத்தின் நடுவில் நின்று செல்பி எடுப்பது, ரயிலில் ஏறி எடுப்பது, பயணிக்கும்போது கதவுக்கு அப்பால் தலையை நீட்டி எடுப்பது என பெரும் அழிச்சாட்டியம் செய்ததால் பலர் தொடர்ச்சியாக உயிர் இழக்கத்தொடங்கினர். அண்மையில் கூட மத்தியப் பிரதேசத்தில் சரக்கு ரயில் மீது ஏறி செல்பி எடுக்க முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். இதனால் ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் என்ற விதியை கடந்த ஆண்டு ரயில்வே அமல் படுத்தியது.
இப்படி வில்லங்கமான இடத்தில் நின்று விதியை மீறி செல்பி எடுத்து தமது விதியை முடித்துக்கொல்வோரால் ஒரு நாட்டின் அரசு எந்தளவு கடுப்பாகியிருக்கிறது என்று அறிந்தால் இந்த செல்பியின் தாண்டவம் புரிந்துவிடும்.
ஆம், தாய்லாந்தில் மாய்காவோ என்ற கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி விதவிதமாக செல்பி படங்களை எடுத்தனர். இது அவர்களுக்கு ஆபத்தை விளைவித்ததோடு, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி பெரும் விபத்துகளை ஏற்படுத்தவும் ஏதுவானது. இதனால் விமான நிலையம் முன்பு செல்பி படம் எடுக்க மாகாண அரசு தடை விதித்தது. ஆனாலும் தொடர்ந்து செல்பி எடுத்து தொந்தரவு கொடுத்ததால் கடுப்பான அரசு, அங்கு படம் எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. செல்பி எடுக்கும்போது விபத்தில் சாவதா, எடுத்தபின்பு தூக்கில் தொங்குவதா என்பதை சுற்றுலா பயணிகள்தாம் முடிவு செய்யவேண்டும்.
செல்பி பழக்கம் விபரீதமாகவும் சென்றுகொண்டிருக்கிறது. கோயிலிலும் செல்பி, சுடுகாட்டிலும் செல்பி, கூட்டத்திலும் செல்பி, தனிமையிலும் இனிமை காணும் வழிமுறை செல்பி.
லெபனானில் உள்ள சுடுகாட்டு காவலாளி டெப் சாய்ஃலி பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துபோன தனது தாயாரின் பிணத்தை தோண்டியெடுத்து அதனுடன் செல்பி எடுத்து பீதியை ஏற்படுத்தியுள்ளார். மரணங்கள் தனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதாக அவர் தொலைககட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுவரை நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் அவர் கூற பேட்டி கண்டவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
ஆந்திராவில் பிரபல நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவருடைய உடல் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் பணிபுரிந்த நான்கு நர்ஸ்கள் ஹரிகிருஷ்னாவின் பிணத்துடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். ‘பிணத்துடன் செல்பியா?’ என்று பலரும் கண்டனம் தெரிவிக்க, மருத்துவமனை நிர்வாகம் அவர்களை பணிநீக்கம் செய்து ஹரிகிருஷ்ணாவின் குடும்பத்தினர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காடு வனப்பகுதியில் மது என்ற பழங்குடிஇளைஞர் பலசரக்கு கடையில் அரிசி திருடியதாகக் கூறி, அவர் கட்டியிருந்த கைலியால் கைகளைக் கட்டிப்போட்டு கடுமையாக தாக்கினர். இந்த கொடூர செயலால் அவர் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் வழியால் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேதனை என்னவென்றால், அவர் தக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக நின்றபோது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் இந்த சம்பவத்தை தனது செல்போனில் செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். முன்பு விபத்துகளில் சிக்கியவர்களிடம் பணம் எடுப்பதை சில வக்கிரர்கள் செய்தனர். இப்போது செல்பி படம் எடுப்பதை செய்கின்றனர்.
திருப்பதியை அடுத்த தானிமேடு காலனியை சேர்நத மெக்கானிக் சிவக்குமார்(25) மது அருந்திவிட்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்வதுபோல் செல்பி எடுத்து அவருடைய நண்பர் சிவாவிற்கு அனுப்ப முடிவு செய்தார்.
மின்விசிறியில் சேலையை மாட்டி ஒரு காலை கட்டில் மீதும் இன்னொரு காலை டேபிள் மீதும் வைத்து சேலையை முடிச்சு போட்டு கழுத்தில் மாட்டியுள்ளார். பின்னர் செல்பி எடுத்த படத்தை நண்பருக்கு அனுப்பிவிட்டு கீழே இறங்குபோது கால் தவறியது. இதனால் கழுத்தில் மாட்டியிருந்த சேலை இறுக்கி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக மேலாளர் பிரசாந்த் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர். ஓட்டுநர், நடத்துநர் வீட்டில் யாராவது இறந்தால், பிணத்துடன் செல்பி எடுத்து அனுப்பினால்தான் அவருக்கு விடுமுறை. இவரால் இழவு வீடெல்லாம் செல்பி ஸ்பாட்களாக, ஒப்பரி வைப்பவர்கள் எல்லாம் போஸ் கொடுக்க, மேலதிகாரிகள் இவருக்கு கல்தா கொடுத்துவிட்டார்கள்.
2016 ஜூனில் ராஜஸ்தான் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் வரதட்சணையாக 51 ஆயிரம் ரூபாய் வழங்காததால் தனது கணவர் மற்றும் அவரது இரு சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்தார். அப்பெண்ணின் நெற்றியிலும் கையிலும் ‘வரதட்சணை தராததவர்’ என கணவர் குடும்பத்தார் பச்சை வேறு குத்தியுள்ளனர்.
இதைப்பற்றி விசாரிக்க ராஜஸ்தான் மகளிர் ஆணைய தலைவர் சுமன் ஷர்மாவும் உறுப்பினர் குர்ஜாரும் சென்றனர். சுமன் ஷர்மா விசாரித்துக் கொண்டிருந்த போது, அருகில் இருந்த குர்ஜார், அந்த பெண்ணுடன் செல்பிக்களை எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் இருக்க, அருகில் சிரித்த முகத்துடன் அவர் போஸ் கொடுத்திருக்கிறார்.
அந்தக் கொடுமையை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட, குர்ஜார் மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவேண்டியதாயிற்று.
சீனாவின் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த குன் என்ற வாலிபர் தாக்கியதில் அவர் காதலி லின் இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குன், காதலியை கொன்று விட்ட சோகத்தில் (?) அவளது உடல் அருகே அமர்ந்து, ‘செல்ஃபி’ எடுத்து, ‘எனது சுயநலக் காதலை மன்னித்து விடுங்கள்’ என தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அமெரிக்காவின் கெய்னஸ் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பருவ உடலை பலவிதவிதமாக செல்பியெடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பணம் சம்பாதித்துள்ளார்.
அறையின் கதவை மூடிக்கொண்டு கணனியே கதி என சிறுமி கிடந்ததால் சந்தேகமடைந்து அதை ஆராய்ந்த தாய் அதிர்ச்சியில் உறைந்துபோனார். தன்நிர்வாண செல்பி எடுத்து விற்க முடிகிற இணைய தளங்களுக்கு 20 முதல் 100 டாலர்கள் விலைக்கு தனது நிர்வாண படங்களை அவர் விற்றுள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நாயகி யாஷிகா ஆனந்தும் தனது படுக்கையறை செல்பியை பகிர்ந்து பலரது பல்ஸ் எகிற வைத்துள்ளார்.
காராக்கிருகத்தில் கம்பிக்கு பின்னால் சங்கமம் ஆனாலும், செல்பி மோகம் விடுவதில்லை. கடந்தாண்டு மார்ச்சில் உத்தரபிரதேச முசாபர்நகர் மாவட்ட சிறையிலிருக்கும் விசாரணை கைதிகள் மூன்று பேர் சிறை வளாகத்தினுள் செல்பி எடுத்து பழக்க தோஷத்தில் வலைத்தளத்தில் பதிவிட்டு சிறைக்காவலர்களிடம் சிக்கிக்கொண்டார்.
பிரதமர் மோடி ஒரு செல்பி பிரியர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்குச் சாவடி அருகே பாஜகவின் சின்னமான தாமரைச் சின்னத்துடன் செல்பி எடுத்து தேர்தல் ஆணைய சினத்துக்கு ஆளானார். பிரதமர் பதவிக்கு வந்ததும் பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக ‘செல்பி வித் டாட்டர்’ என்ற அழைப்பை விடுத்தார். அதை ஏற்று கிரிக்கெட் வீரர் சச்சின் தனது மகள் சாராவுடன் செல்பி எடுத்து அனுப்பினார். அவ்வாறே இலட்சக்கணக்கானோர் அனுப்பினர். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் மோடியை போல செல்பி பிரியரே.
தமிழ்நாட்டில் பொதுமக்களுடன் செல்பி அதிகம் எடுத்த அரசியல் தலைவர் ஸ்டாலின்தான். ஆனாலும், காவிரி விவகாரத்துக்காக ஸ்டாலின் போராடியபோது செல்பி எடுக்க முயன்ற இளைஞரை அடித்தார். நடை பயணத்தில் பெண்களுடன் போஸ் கொடுத்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு உருவானது. ‘ பெண்கள் செல்பி எடுத்தால் போஸ், ஆண்கள் எடுத்தால் அடியா?’ என்று விமர்சனம் எழுந்தது.
ஸ்டாலினை பின்பற்றி எல்லா தலைவர்களும் செல்பி விளம்பரதாரராகிவிட்டனர். இந்தாண்டு ஜனவரியில் திருப்பரங்குன்றம் தொகுமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்சின் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வதுடன் செல்பி எடுக்க இளம்பெண்கள் போட்டி போட்டுள்ளனர். பிப்ரவரியில் பா.ம.க பிரமுகர் முனிராஜ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அன்புமணியும் மணமக்கள் மற்றும் உறவினர்களுடன் செல்பி எடுத்து தள்ளியுள்ளார்.
வாக்கு கேட்க வரும் தலைவர்களுடன் இணைந்து செல்பி எடுப்பது பொதுமக்களின் பொழுதுபோக்காகிவிட்டது. அதைப்போல, வாக்களித்தவர்கள் யாவரும் கையில் மையுடன் செல்பி எடுத்து பதிவிட தயங்குவதில்லை.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் செல்பி எடுக்க நெருங்கிய இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார். இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவியதுடன் சிவக்குமார் மீது கடும் கண்டனம் எழுந்தது. இதுகுறித்து சிவக்குமார் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டதுடன் அந்த இளைஞருக்கு புதுசெல்போன் ஒன்றினையும் வாங்கி கொடுத்தார். சமீபத்தில் இயக்குனர் ராமதாஸ் இல்ல மண விழாவில் பங்கேற்க சென்றபோதும் அங்கிருந்த ஒருவர் சிவக்குமாருடன் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றார். அப்போதும் சிவக்குமார் அதனை தட்டிவிட்டுள்ளார். மீண்டும் அதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
‘ஜூலை காற்றில்’ பாடல் வெளியிட்டு விழாவின்போது கையில் செல்போனை வைத்துக்கொண்டு கார்த்தியை செல்பி எடுக்க அழைத்தார் நடிகை கஸ்தூரி. நல்ல பிள்ளையாக வந்தவரிடம், ‘உங்க அப்பா இல்லை. அதனால் அவசரமாக ஒரு செல்பி எடுத்துக்கொள்வோம்’ என்று சிவகுமாரின் செல்பி சர்ச்சையை குறிப்பிட்டு பேச, கார்த்திக் செல்பிக்கு காட்டாமல் முகத்தை திருப்பிக்கொண்டதோடு ‘ பிரபலங்களிடம் செல்பி எடுக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நாகரிகத்தை மறந்துவிட்டோம். ஒவ்வொரு செல்போனிலும் முன்பக்கமும் பின்பக்கமும் ‘பிளாஷ்’ இருக்கிறது. அவ்வளவு ஒளி பட்டால் கண் பாதிக்கப்படாதா? தலைவலி இருப்பவர் நிலைமை என்ன ஆகும்?’ என்று மைக்கில் விளாசிவிட்டார்.
இதேபோன்ற ரசிகர்களின் அத்துமீறல்களை அஜித் மென்மையாக கையாண்டு சபாஷ் வாங்கியுள்ளார். தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்றபோது, அந்த பள்ளியில் வேலை செய்த பணியாளர்களான ரசிகர்கள் சிலர் அஜித்துடன் செல்பி எடுக்க முற்பட்டனர். ரசிகர்களிடம் கனிவாக பேசி, ‘ இது பள்ளி வளாகம். இங்கே செல்போன் பயன்படுத்தக் கூடாது. நானே உங்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறேன்’ என்று சாமர்த்தியமாக தப்பினார் அஜித்.
சிவகுமார், கார்த்திக் ஆகியோர் செல்ஃபிக்கு எதிராக இருந்தாலும், சூர்யா அதற்கு ஆதரவக இருந்து வருகிறார். சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய்யின் பெற்றோருடன் அவர் செல்ஃபி எடுத்து பதிவிட்டுள்ளார்.
செல்பி மோகம் எந்த அளவு போடிருக்கிறதென்றால், ஓர் ஏழை சிறுவன் செருப்பை ஸ்மார்ட் போன் போல் பிடித்திருக்க, அதற்கு நான்கு சிறார்கள் போஸ் கொடுக்க ஒரு படம் சமூக வலைத்தளங்களில் கடந்தாண்டு இறுதியில் பரவியது.
காங்கோ நாட்டில் விருங்கா உயிரியல் பூங்காவில் கொரில்லாக்களுடன் செல்பி எடுப்பதை வனத்துறை ஊழியர் மேத்யூ ஷவாமு வழக்கமாக கொண்டிருந்தார். அவரது இந்த பழக்கம், நடாகாஷி, படாபிஷி என்ற இரு கொரில்லாக்களை அடிமையாக்கிவிட்டது. மேத்யூ ஷவாமு செல்போனை தூக்கினாலே அந்த குரங்குகள் இரண்டும் போஸ் கொடுக்கின்றன. போஸ் கொடுக்கும்போது மனிதர்களைப்போல் விதவிதமாக முகபாவம் காட்டுவது டூ மச்சாக இருந்தாலும், ‘ஹார்ட் டச்’சாக இருக்கிறது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 2011ல் ஆய்வுக்காக வந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் டேவிட் ஜே.ஸ்லேடர், தனது காமிராவை அங்கேயே விட்டு விட்டுச் சென்றார். வன ஆய்வாளருக்கு பரிச்சயமான நருடோ என்ற மனித குரங்கு வனப்பகுதியையும் மற்ற குரங்குகளையும் புகைப்படங்களாக எடுத்து தள்ளிவிட்டது. அத்துடன் தன்னையும் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டது உச்சம்.

கொஞ்ச காலத்துக்குப்பின்பு தனது காமிராவை எடுத்துக்கொண்ட ஸ்லேடர் அந்த புகைப் படங்களை வெளியிட்டார். அவை உலகம் முழுவதும் பிரபலமானது.
இந்நிலையில், இந்த புகைப்படங்களுக்கு பதிப்புரிமை கொண்டாடிய ஸ்லேடருக்கு அந்த உரிமையை கொடுக்கக்கூடாது என விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டா சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. படத்தின் உரிமை நருடோ என்னும் அந்த மனித குரங்குக்கே சொந்தம் என்றது. நல்லவேளை, பதிப்புரிமை சட்டம் விலங்குகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்படாத நிலையில் நருடோவுக்குபதிப்புரிமை உண்டு என்பதை ஏற்க முடியாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டது.
இப்படி செல்பி மோகம் பிடித்து அலைவது ஒரு வித மன நோய் என்கிறார்கள் அமெரிக்க மனநல மருத்துவர்கள். செல்பி எடுப்பதில் அடிமையானார்களை தமக்குத்தாமே அடிமையானவர்களாக கருதலாம்.
தினமும் மூன்று முறை, ‘செல்பி’ எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் பதிவிடாதது ஆரம்ப மன நிலை. தினமும் மூன்று முறை படம் எடுத்து, அதை சமூக வலை தளங்களில் தவறாமல் பதிவிடுவது இரண்டாம் நிலை. எப்போதும் எதைப் பார்த்தாலும் ‘செல்பி’ படம் எடுத்து உடனுக்குடன் சமூக வலைதளங்களுக்கு அனுப்புவதை அன்றாட செயலாகக் கருதுவது முற்றிய மூன்றாவது நிலை என்கின்றனர் அவர்கள்.
சிவகுமார் போன்றவர்கள் செல்பிக்கு பயப்படுவதிலும் அர்த்தம் இருக்கிறது. ஏனெனில், செல்போனிலிருந்து வெளிவரும் எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்கள் மரபணுவை பாதிக்கச்செய்கிறது. செல்பி எடுக்கும்போது வெளியாகும் நீல நிற ஒளி தோலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வளவு சொன்னபிறகு இதை வைத்து மருத்துவம் என்ற பெயரில் காசாக்காமல் இருப்பார்களா? அமெரிக்காவில் ‘ஒபாமா கேர்’ என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் செல்பி பிரியர்களுக்கு பிரத்யேக மருத்துவமே அளிக்கப்படுகிறது.
சிங்கப்பூரை சேர்ந்த நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வில், ஒருவர் எடுக்கும் செல்பி அவரது குணநலன்களையும், தற்போதைய மனநிலையையும் பிரதிபலிக்கும் என அறியப்பட்டுள்ளது.
செல்பியில் உதடுகளை குவித்துக்கொண்டு போஸ் கொடுத்திருந்தால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவராகவும், மனம் தொடர்பான பிரச்சினைகளை கொண்டவராகவும் இருக்கலாமாம்.
செல்பியில் சிரித்தப்படி இருந்தால் நீங்கள் புதிய அனுபவங்களை தேடுபவர் என்று அர்த்தம். கமராவை நேரடியாக பார்த்தால் நீங்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர் என்று பொருள்.
செல்பியை பகிரும்போது உங்கள் இருப்பிடத்தை குறிப்பிடாவிட்டால் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய விபரங்களை பொதுவெளியில் வெளியிட விரும்பவில்லை என்பது குறிப்பாம். காமிராவை தாழ்த்தி வைத்தப்படி செல்பி எடுக்கப்பட்டிருந்தால் அவர் பழகுவதற்கு இனிமையானவராம்.
சுற்றுலாவின்போது செல்போன் பறிக்கப்படாமல் இருக்க ‘செல்பி’ ஸ்டேண்ட் என்னும் குச்சி மூலம் தற்காத்துக்கொள்ள பி.ஆர்.எஃப்.ஐ. மையம் பயிற்சியளித்து வருகின்றது. இந்தப் பயிற்சிக்கு ‘மோனாப்பாட்’ சண்டை என பெயரிடப்பட்டுள்ளது.
‘சேஃப் செல்பி’ என்ற குழுவின் கீழ் நடத்தப்படும் இந்தத் தற்காப்புக் கலைப்பயிற்சி ஐந்து வகுப்புகளாக வழங்கப்பட்டு வருகின்றது.


இங்கிலாந்தில் செல்பி மோகத்தை போக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் மின்ட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளன.
மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போல் அசெல்பி சேலன்ச் ஒன்று இணையத்தில் பரவுகிறது. அதாவது, கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்பி எடுக்கவேண்டும் என்பதே அந்த சவால்.
பங்களாதேஸ், தலைநகர் டாக்காவில் 1,151 பேர் ஒன்றாக இணைந்து எடுத்த மிகப்பெரிய செல்பி உலக சாதனை என்கிறார்கள். ஆனால், ஓரிருவராக அவ்வப்போது எடுத்துவிடும் செல்பி பெரிய வேதனை என்கின்றனர் சமூக வலைத்தளத்தில் சஞ்சரிப்பவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here