மதுரை தங்கராஜ் சாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் மூர்த்தி திடீரென விசிட் அடித்தார். கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு 30 சதவீத பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்தில் வேலை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தும் அமைச்சர் ஆய்வு நடத்திய அலுவலக வேலை நேரமான 10 மணிக்கு கூட சொற்ப அளவிலான ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்துள்ளனர். மீதமிருந்த பெரும்பாலான ஊழியர்கள் காலதாமதமாகவே பணிக்கு வந்துள்ளனர்.
இதனை கண்காணித்த அமைச்சர் வணிக வரித்துறை இணை ஆணையரை வெளுத்து வாங்கியுள்ளார். ‘வழக்கமாகவே இப்படித்தான் எல்லாரும் லேட்டாக வேலைக்கு வருவார்களா?’என இணை ஆணையரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர், கால தாமதமாக பணிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
அங்கிருந்து புறப்பட்ட அமைச்சர், தொடர்ந்து மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு வளாகத்தில் உள்ள வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகம், ஒத்தக்கடை, தல்லாகுளம், சொக்கிகுளம், தெப்பக்குளம் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
பத்திர எழுத்தர்கள், பதிவாளர்கள் இடையே இடைத்தரகர்களை பயன்படுத்தக் கூடாது. லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.














