நெல்லை அருகே சுத்தமல்லி இந்திரா காலனியை சேர்ந்தவர் அழகுமுத்து மகன் முத்துகிருஷ்ணன் (22 )இவர் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் அவரது வீட்டருகே உள்ள கல்வெட்டான் குழியில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் இவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயற்சி செய்தனர். உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் வரை உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அங்கு போலீஸ்சாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய பேச்சு வார்த்தை நடத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இறந்தவரின் உறவினர்கள் சுத்தமல்லி சாலையில் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் .இது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
.
சுத்தமல்லியில் கொலை செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த ஆண்டு நடந்த ஆண்டு விழாவின்போது வேறொரு தரப்பினர் விசில் அடித்தது தொடர்பாக தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினரிடம் சிறு சிறு பிரச்சனைகள் நடந்துள்ளன.தவிர கஞ்சா பிரச்சனையும் தகராறுக்கு ,காரணமாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது