திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கல்லரப்பாடி ஊராட்சிக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏழுமலை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாக்களித்த மக்களுக்கு எந்தப் பணியும் செய்யவிடாமல் இவருக்கு ஊராட்சி செயலாளர் வேல்முருகன் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.
எங்கள் வீட்டில் மாடு மேய்த்த வரை ஊராட்சி மன்ற தலைவராக ஏற்க முடியாது என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவரின் இருக்கையில் அமர விடாமல் தனியாக பிளாஸ்டிக் சேர் போட்டு அமர வைத்து அவமானப் படுத்தியுள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகத்திற்கு வருவார் என்பதால் ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படாமல் எப்போதும் மூடிய நிலையிலேயே வைத்துவிட்டு,ஊராட்சியில் நடைபெறும் பணிகளுக்கு தேவைப்பட்ட கையொப்பத்தை பெற மட்டும் அலுவலகத்திற்க்கு வரவழைத்ததாக ஏற்கனவே ஏழுமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊராட்சி செயலர் தன்னை ஒருமையில் பேசுவதும் ஊராட்சி மன்ற தலைவரின் பணிகள் அவரே செய்வதும் பற்றி வீடியோ ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக புகார் அளித்தார்.
பின்பு மாவட்ட திட்ட இயக்குனர் விசாரணை நடந்தது. அவர் இருவரும் சமரசமாக செல்லும்படி ஊராட்சி மன்ற தலைவரிடம் கையொப்பம் பெற்றுக் கொண்டுள்ளாதாகவும், அதிகாரியின் இந்த நடவடிக்கை மன வேதனையை உருவாகியுள்ளதாகவும் தன்னை நம்பி வாக்களித்த கிராம மக்களுக்கான ஊராட்சி பணிகளை செய்ய இடையூறு செய்து வரும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை பூட்டிய ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.














