ஆப்ரிக்க நாடான மொராக்காவின் மேற்கு சகாராவில் 1997ஆம் ஆண்டிலிருந்து பொலிசாரியோ முன்னணி என்ற அமைப்பு ஆதிக்க ம் செலுத்தி வருகிறது.இது சகார்வி அரேபிய ஜனநாயகக் குடியரசின் (SADR) இராணுவப் பிரிவு. 1973ல் ஸ்பானிய காலனித்துவ ஆட்சியை எதிர்த்துப் போரிட நிறுவப்பட்டது.
மேற்கு சகாராவை தனி நாடாக பிரித்துக் கொடுக்க வலியுறுத்தும் இந்த அமைப்புக்கும் மொராக்கா அரசுக்கும் இடையே வழக்கம் போல் ஐநா மூக்கை நுழைத்து பஞ்சாயத்து செய்துவருகிறது. அமெரிக்க ஆதரவைக் கொண்டிருந்த மொரோக்கோவிற்கும், போலிசாரியோவிற்கும் இடையே சண்டை தொடங்கி கால் நூற்றாண்டு ஆகப்போகிறது.
பிரிட்டனை விட பெரிய நிலப்பகுதியாயினும், பெரும்பாலும் பாலைவனப் பகுதியாக இருப்பதாலும், மொத்த மக்கட்தொகையே 2, 50,000 என்பதாலும் பெரிய நாடுகள் இதன் மீது அதிக அக்கறை காட்டவில்லை. ஆனாலும், பாஸ்பேட் , மீன், எண்ணெய் வளத்தின் மீது சில நாடுகள் கண் வைக்காமல் இல்லை. ஸ்பெயின் போராட்ட அமைப்பு பக்கமும், பிரான்ஸ் மொராக்கோ அரசு பக்கமும் நிற்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

மொரோக்கோ அரசு, அமெரிக்க நிறுவனமான கெர்-மக்கீக்கும், பிரெஞ்சு நிறுவனமான டோட்டல் – ஃபைனா எல்ஃபுக்கும் மேற்கு சகாராப்பகுதியில் எண்ணெய் வள ஆய்வு நடத்த உரிமங்களை வழங்கியது. பொலிசாரியோ இயக்கம் ஆஸ்திரேலிய நிறுவனமானஃபியூஷன் ஆயிலுடன் கிழக்கு கடற்கரையில் எண்ணெய் ஆய்விற்கு ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. இங்கிலாந்து நிறுவனமானவெஸ்ஸெக்சுடன் மொரோக்கோ எண்ணெய் நிறுவனமான ஓனாரெப் உடன்படிக்கை கையெழுத்திட்டது. இப்படியாக, சொந்த நாட்டின் வளத்தை, ’ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே’ என்பதுபோல் அரசும், போராட்ட அமைப்பும் மாறி, மாறி அந்நியருக்கு ஏலம் போட்டன.
ஆனபோதும், ஐநா, அமெரிக்கா கண்காணிப்பு கட்டுப்பாட்டால் அதிகம் மோதிக்கொள்ளாமலும், அதேவேளை , அல்ஜீரியா, லிபியா தலையீட்டால் சிறு, சிறு உரசல்களை கொண்டும், அரசும் போராட்ட அமைப்பும் இருபுறமாக முறைத்துக்கொண்டே நிற்கின்றன.
இந்நிலையில் தான் மதுரைக்கு வந்த சோதனையாக பொலிசரியோ முன்னணியின் தலைவர் பஹ்ரிம் ஹலிக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. மொரோக்கோவில் இதற்கு போதிய சிகிச்சை வசதி இல்லை என்பதால், ஸ்பெயினில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கும்படி பஹ்ரிம் ஹலி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஸ்பெயினும் ஏற்றது. ஆனால் மொரோக்கோ அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை அளிக்கப் போவதாக ஸ்பெயின் அறிவித்தது. அதன் அடிப்படையில், அல்ஜீரியா அடையாள அட்டையில் ஸ்பெயின் சென்ற பஹ்ரிம் ஹலி அதன் வடக்கு மாகாண மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் அல்ஜீரியாவிலிருந்து ஸ்பெயின் வந்ததை ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் அரஞ்சா கோன்சோலஸ் லயாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்ரிக்க இனத்தவரின் நாடாக இல்லாமல் இருந்தும். ஸ்பெயின் ஒரு போராளி இயக்க தலைவருக்கு சிகிச்சை பெற வசதி செய்து கொடுத்துள்ளது. போராட்டம் வேறு , மனிதாபிமானம் என்பது வேறு என அது தெளிவுபடுத்தியுள்ளது.
இக்காலகட்டத்தில், ஒரு நாட்டின் விசுவாசமிக்க குடிமகளாக, இருந்தும், ஒரே இனத்தாளாக இருந்தும், போராளி அமைப்பின் தலைவரை பெற்றதற்காக தமிழ்நாட்டில் சிகிச்சை எடுக்க மறுக்கப்பட்டு உயிரிழந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

பார்வதி அம்மாள் கடந்த 16-4-2010 இரவு தீவிர நோயாளியாக, படுத்த படுக்கையில், மலேசியாவிலிருந்து இந்திய தூதரக விசாவினைப் பெற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்த நிலையில் இங்கு இறங்க அனுமதி மறுக்கப்பட்டு, அதே விமானத்தில் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த சம்பவம் மறுநாள் காலையில்தான் தெரியும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஆனாலும், அப்பாவித் தாய் பார்வதியம்மாள் பிறந்த நாளன்று அவர் மறைந்ததால் அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.













