கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரின் மனைவி ராமாத்தாள்( 91). இவர் கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை சிவானந்தா மில்லில் பணிபுரிந்து வந்தார். அப்போது கிடைத்த பணத்தை வைத்து விளாங்குறிச்சி சாலையில் ஒரு ஏக்கர் இடத்தை வாங்கியுள்ளார். இவருக்கு மாணிக்கம், சின்னராஜ், மகேஸ்வரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மாணிக்கம் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர் அங்கேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது சகோதரர் சின்னராஜ் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
30 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் இருந்து சென்ற மாணிக்கம் மீண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து தனக்கு வேலை இல்லை என்று கூறி தாயாருடன் சேர்ந்து வசிக்கத் துவங்கினார். ராமாத்தாள் தனது மகன் மாணிக்கத்தை தனது தோட்டத்தில் தங்க வைத்து அங்குள்ள மாடுகளைப் பார்த்துக் கொள்ள அனுமதி அளித்தார். இதற்கிடையே ராமாத்தாளுக்கு கால் முறிவு ஏற்பட்டு அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மாணிக்கம் ஒரு ஏக்கர் இடத்தில் வேறு நபர்களை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் மாதம் இரண்டு லட்ச ரூபாயை வாடகையாக வசூலித்து வந்துள்ளார். தாயாரின் மருத்துவச் செலவிற்கு கூட பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்த அவர், சொத்துகளை தனது பெயருக்கு தாயார் கொடுத்துவிட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்துள்ளார். .அதற்காக தாய் ராமாத்தாள் தூங்கி கொண்டு இருந்த போது கைரேகைகளை பத்திரங்களில் பதிக்க மாணிக்கம் முயற்சி செய்தார்.
இதையடுத்து ராமாத்தாள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு மனு அளித்தார். இதனடப்படையில் சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி 91 வயது தாயார் சொத்துகளை போலியான ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மகன் மாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.