மதுரை மாவட்டத்தில கொ ரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த நான்கு தினங்களாக
வீட்டில் 7047 பேர் தனிமைப்படுத்தி கொண்டனர்.
அவர்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு சத்தான சுகாதாரமான உணவு தேவை என்பதை கருத்தில் கொண்டு
மதுரை அண்ணாநகர் பகுதியில் சக்கரா ரெஸ்டாரண்ட் நடத்திவரும் அறிவழகன் லட்சுமி தம்பதியினர் தொற்று பாதிக்கப்பட்ட மற்றும் உடன் இருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று இலவசமாக மூன்று வேளையும் உணவுகளை வழங்கி வருகின்றனர்.
தொடக்கத்தில் அறிவழகன் தனது செல்போன் நம்பரை வாட்ஸ் அப் குழுக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உணவு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார்.
அதன்படி மதுரை வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, கேகே நகர், விரகனூர், முனிச்சாலை, அய்யர் பங்களா, பி.பி. குளம் என பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உடன் இருப்பவர்கள் இலவசமாக உணவுகளை பெற்று வருகின்றனர்.
இதற்காக பிரத்யேக சமையலர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து இந்த சேவையை மேற்கொண்டு வருகிறார் அறிவழகன். கடந்த 10 நாட்களாக, தினமும் 300 பேருக்கு, 3 வேளையும் உணவு வழங்கி வருவதாகவும், மதுரை மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று சொல்லும் வரை இந்த பணியை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.












