பணகுடி அருகிலுள்ள ரோஸ்மியா புரத்தில் தனியார் அனாதை மற்றும் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு முதியோர், மாற்று திறனாளிகள், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் 26 பேர் உள்ளனர். காப்பக பொறுப்பாளராக ஜெயலெட்சுமி என்பவர் உள்ளார்.
இங்கு இரு பாதிரியார்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கலெக்டர் அலுவலகத்திலும் ஒருவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து காப்பகத்தை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
நேற்று ராதாபுரம் தாசில்தார் ஜேசுராஜன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரகுமார், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரஸ்வதி ஆகியோர் கொண்ட குழுவினர் கலெக்டர் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு சென்றனர்.

ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து காப்பக பொறுப்பாளர் ஜெயலெட்சுமி தகராறில் ஈடுபட்டார். இதனால், அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பணகுடி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டு, ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்.
போலீசாரின் துணையோடு ஆய்வு குழுவினர் காப்பகத்தின் உள்ளே நுழைந்தனர். காப்பகத்தில் ஆவணங்களோடு மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், சிறார்கள், கைவிடப்பட்ட முதியவர்களை இங்கு தங்கவைக்க முறையான அனுமதியும் பெறப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
அதையடுத்து, அங்கிருந்த மாற்றுத் திறனாளிகள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியோர் அனைவரும் நாங்குநேரியிலுள்ள அரசு காப்பகத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆய்வு குழு அறிக்கை கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது முடிவின்படி மேல்நடவடிக்கைகள் தொடருமென அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.









