சுதந்திர தினத்தையொட்டி, முப்படை வீரர்கள், துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசாரின் வீர தீர செயல்களை பாராட்டும் வகையில் பதக்கங்களும், விருதுகளும் அறிவிக்கப்படுவது வழக்கம்.
அதுபோல், இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த பதக்கங்களை அறிவித்தார். வீர தீர செயலுக்காக வழங்கப்படும் பதக்கங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) அதிகமான பதக்கங்களை பெறுகிறது.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், சில மாநிலங்களில் நக்சலைட்டுகளுக்கு எதிராகவும் போராடியதற்காக அதிக பதக்கங்கள் கிடைத்துள்ளது.
வீர தீர செயலுக்காக வழங்கப்படும் மொத்தம் 180 பதக்கங்களில், காஷ்மீர் மாநிலத்தில் துணிச்சலான செயலில் ஈடுபட்ட 114 பேருக்கும், நக்சலைட் ஆதிக்க மாநிலங்களில் போராடிய 62 பேருக்கும், வடகிழக்கு மாநிலங்களில் வீர தீர காரியங்களில் ஈடுபட்ட 4 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன..














