கேரளாவின் (மரியாதைக்குரிய) இலக்கிய விருதுகளில் ஒன்றான ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அறிவிகப்பட்டது. மலையாளத்திலும் வேறு இந்திய மொழிகளிலும் எழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்களுக்கு ஒரு கேடயமும் 3 லட்ச ரூபாய் பணமும் தரப்படும்.கேரள முதலவர் பினராயி விஜயன் இந்த அமைப்பின் தலைமைப் புரவலராக இருக்கிறார். மேலும் எம்.டி. வாசுதேவன் நாயர், பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் ஆகியோரும் இந்த அமைப்பின் புரவலர்களாக உள்ளனர்.
இந்த முறை பரிசு பெறுபவரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் கமிட்டியில் கவிஞர் பிரபா வர்மா, மலையாள பல்கலைக்கழக துணை வேந்தர் அனில் வல்லத்தோள், எழுத்தாளர் ஆலங்கொடே லீலா கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிலர் பாலியல் சீண்டல் புகார்கள் அளித்திருந்த நிலையில் இந்த விருதை அளிப்பது தவறு என்று மலையாளத் திரையுலகைச் சேர்ந்த உமன் இன் சினிமா கலெக்டிவ் கேள்வியெழுப்பியது. இந்த விருது நடிகை பார்வதி உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை எழுப்பினர்.
’வைரமுத்துவின் எழுத்துகளுக்காகவே இந்த விருது அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவருடைய நடத்தை ஆராய்வது தங்கள் நோக்கமல்ல’ என்று ஓஎன்வி குறுப் கல்சுரல் அகாடமியின் தலைவரும் இயக்குனருமான அடூர் கோபலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்ந்த நிலையில், மே 28ஆம் தேதி ஓஎன்வி கல்சுரல் அகாதெமியின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விருது குறித்து மறு பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. “தேர்வுக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த ஆண்டு அளிக்கப்பட்ட விருது மறுபரிசீலனை செய்யப்படுகிறது” என அந்த அறிக்கை கூறுகிறது.
இந்நிலையில், ஓஎன்வி இலக்கிய விருதைத் திருப்பித் தருவதாகவும், அதற்காக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகையுடன் கூடுதலாக 2 லட்சம் ரூபாய் சேர்த்து, கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், யதார்த்த நிலையை முன்னறியாமல், அதே வேளையில் எடுத்த முடிவில் நிலைத்திருக்க முடியாமல் தவிக்கும் மலையாள அறிவுலகத்தின் பேதமையையும், வழங்கப்படாத விருதை திருப்பியளிக்கவும், பரிசுத்தொகையை அரசுக்கு நிதியாக அளிக்கவும் முடிவெடுத்திருக்கும் வைரமுத்துவின் கையறு நிலையையும் கருத்தூன்றி பார்க்க வேண்டியுள்ளது.
விருதுகள் யாவும் உச்சபட்ச முடிவுகள் அல்ல, அழகிகளாக ஆயிரக்கணக்கான கடைநிலை பெண்கள் கண்காணா இடங்களில் இருக்க, மேல்மட்ட மேட்டிமை பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து உலக அழகிப்பட்டம் சூட்டுவதற்கும் இதற்கும் அதிக வித்தியசங்கள் இல்லை.
மேலும், இலக்கிய விருது என்பது எழுத்துக்குத்தான். உலகளவில் விருது பெற்ற பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களே, சல்மான் ருஷ்டி வரை.
இங்கு நுணித்துப் பார்த்தால், கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே, தனது பணிக்காக சர்வதேச எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அப்போது ஹிந்தியில் ‘பர்சேட்’ படத்தில் நடிகர் அடில் ஹுசனுடன் கவர்ச்சியாகவும் நெருக்கமாகவும் நடித்ததை சர்ச்சையாக்கினர். பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் அவர் உடல் பற்றி பேசியது மிகுந்த சர்ச்சையானது.
2018ல் இந்துத்துவா கொள்ளகையை தீவிரமாக ஆதரித்தவர்களுக்கே மத்திய அரசின் பத்ம விருது தேர்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, தொல்லியல்துறை ஆய்வாளர் நாகசாமி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், 98 வயதில் யோகா பயிற்சி அளித்து வரும் நானம்மாள் ஆகியோரது தேர்வு சர்ச்சைக்குள்ளாகி உள்ளானது. அதிலும், கன்னியாகுமரியில் விவேகானந்தர் மட நிர்வாகியாக இருந்த கேரளாவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் பரமேஸ்வரன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது மிகுந்த விமர்சனத்துக்குள்ளானது.
ஒருவர் மீதான புகாரே அவர் மீதான தீர்ப்பாகிவிடாது. சின்மயி 2018ல் கூறிய குற்றச்சாட்டை இன்னும் நிரூபிக்காததுடன், உரிய சட்ட நடவடிககியை தொடரவில்லை. சும்மா, வாய் பேச்சாகவே தொடர்வதோடு, முக்கிய கட்டங்களில் வைரமுத்துவுக்கு அளிக்கபப்டும் சிறப்பை கெடுக்க அதை பயன்படுத்துகிறார்.
2019ல் ஒரு தனியார் பல்கலைக்கழகம் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்தபோதும் சின்மயி கட்டையை போட, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தே விருது வழங்க வரத்தயங்கினார். வைரமுத்து பெயரை நீக்கிய பிறகே நிகழ்ச்சி நடந்தது. ஆக, ஏதோவொரு அரசியல் பின்னணியில் இவர் இயக்கப்படுகிறார் என்பது மட்டும் உறுதியாகிறது.
எழுத்தாளர் பலரும் மிக நேர்த்தியான மனிதர்கள் அல்லர். ஆனால், அவர்களின் அறிவின் ஒரு அங்கமான படைப்பாற்றல் துடிப்பு மிக்கதாக இயங்குகிறது. இப்போது வைரமுத்துவுக்கு எதிராக குற்றஞ்சாட்டும் பாடகி சின்மயி, நடிகை பார்வதி, எழுத்தாளர் லீலா மணிமேகலை ஆகியோரும் அத்தகையவரே. இவர்கள் மூவரும் சுதந்திர பாலியல் வேட்கை உணர்வை தங்கள் வெளிப்பாட்டில் கொண்டவர்கள். லீலா முழுக்க ஆபாச கவிதை எழுதுபவர். மாமேதை மார்க்சின் புகழ்பெற்ற ’உபரி’ கோட்பாட்டை, எதிலோ முளைத்த மயிர் என்று எழுதியவர். சின்மயி பிற திரையுலக பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்.
ஆனாலும், வைரமுத்து, ரஹ்மான் போன்றவர்கள் தங்கள் திறமையை விட, அதிகார வர்க்கத்தினரை அதிகம் நம்புகிறவர்கள், மதிப்பவர்கள். விருது என்றால் பல் காட்டி நிற்பவர்கள், ரஹ்மானுக்கு தேசிய விருது கொடுத்தபோது, சிலருக்கு மட்டுமே குடியரசு தலைவர் அளிப்பார், பிறருக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளிப்பார் என்பதை ஏற்றுக்கொள்ளாமல், பலரும் விழாவை புறகக்ணித்தபோது, ரஹ்மான் மேடையேறி விருது பெற்றார். சக கலைஞர்களை பற்றிய பிரக்ஞை அவருக்கு இல்லை.
அவரைப்போலவே வைரமுத்துவும் தமது திறமையை கருணாநிதி என்னும் அரசியல் வாதியின் காலடியிலேயே சமர்ப்பித்து, அவரையே தமிழாக, உலக அறிவாக விதந்து போற்றியவர். இப்போதும் கூட இருது அறிவிக்கப்பட்டதும் மு.க.ஸ்டாலினையே தேடிப்போனார்.
எப்போதும் தமது வசதி, வாய்ப்புகளைப்பற்றியே அக்கறை கொள்ளும் இவர்கள், தங்களுக்கு பாதிப்பு வரும்போதே கலையை, இலக்கியத்தை பற்றி கவலை கொள்கிறார்கள்.
வைரமுத்துவை விட அதிக மோசமான குற்றச்சாட்டுகள் பலர் மீது பாய்ந்துள்ளன. ஆனாலும், மக்கள் ஆதை உண்மை தன்மையை ஆராய்வார்கள். குற்றம் சுமத்துபவர் பின்னணியும், குணநலனும், வாழ்வியல் முறையும் நீதி வழங்க ஆராய்வதற்கு அவசியமாகிறது.
2019ல் நடிகை ஸ்ரீரெட்டி உதயநிதி ஸ்டாலினை பற்றிய பதிவில், ‘மூன்று வருடங்களுக்கு முன்னால் கதிர்வேலன் காதல் பட சூட்டிங்கின்போது விஷாலின் அறிமுகத்தால் பழக்கமானவர் நீங்கள். அப்போது தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி கிரீன்பார்க் ஓட்டலில் இரவு முழுவதும் என்னுடன் உல்லாசமாக இருந்தீர்கள்.
பிறகு இதுவரை பட வாய்ப்புகள் எதுவும் நீங்கள் தர வில்லை. ஆனாலும், திறமையில் மற்றவர்களை விட நீங்கள் சிறந்தவர்’ என்று கூறியிருந்தார்.
ஆனால், குற்றப்பின்னணியை விட அவரது குற்றச்சாட்டு மக்களால் சீர்தூக்கப்பட்டது. அதற்கேற்ப அவர் கடைசியில் பல்டியும் அடித்துவிட்டார், இதுபோன்றவர்கள் திரையுலகில் அதிகம், திரையுலகில் பாலியல் செயல்பாட்டுக்கான விதிமுறையும் வேறு.
இப்போது கூட விருதை பற்றியும், விருதை பெறுபவரை குற்றஞ்சாட்டியவரை பற்றியும் ஆராய்ந்தால் பல விமர்சனங்கள் வெளியாகின்றன.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு எங்கள் ஐயா ஓஎன்பி குறுப்பு பெயரிலான விருதா? இது அவருக்கு அவமரியாதை செய்வதல்லவா என்று நடிகை பார்வதி இதனை விமர்சித்தார்.
ஓஎன்வி குறுப்பு கவிஞர், பாடலாசிரியர். இடதுசாரி சிந்தனை கொண்டவர். கட்சி சார்பில் தேர்தலிலும் நின்றிருக்கிறார். சாகித்ய அகதாமி, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். இலக்கியத்துக்காக இந்திய அளவில் தரப்படும் உயரிய விருதான ஞானபீடத்தையும் பெற்றுள்ளார்.
ஆனாலும், ஒரு நடிகையாக குறுப்பை அவர் பார்ப்பதை விட, எழுத்தாளராக ஜெயமோகன் அவரைப் பற்றி கூறுவதையும் கவனத்தில் எடுக்கலாம்.
2010 இல் ஓஎன்வி குறுப்புக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்ட போது அதனை விமர்சித்து ஜெயமோகன் இவ்வாறு எழுதினார்.
’இவ்வருடத்தைய ஞானபீட விருது மலையாளக்கவிஞர் ஓ.எ.வேலுக்குறுப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஓர் இலக்கிய விமர்சகனாகவும் வாசகனாகவும் முற்றிலும் தகுதியற்ற ஒரு விருது என்றே இதைச் சொல்வேன். தேசிய அளவில் ஒரு நல்ல கவிஞராக அறியப்படவோ, கேரளக்கவிதையின் முகமாக குறிப்பிடப்படவோ அருகதை இல்லாத ஒரு மேலோட்டமான கவிஞர் அவர். ஓ.என்.விக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது எல்லா வகையிலும் துரதிருஷ்டவசமானது’ என்றார்.
ஆனாலும், அவரது கருத்தையே இலக்கிய கர்த்தாக்களின் முதன்மையான, முழுமையாக கருத்தாக ஏற்க முடியாது. ஏனெனில், மக்களின் மனதை கவராமல் ஒரு கவிஞர் அந்தளவு உயர்ந்திருக்க முடியாது.
அதேபோல்தான், சின்மயியின் குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கலாம் என்பது, ஆனால், நிரூபிக்கப்படும் வரை ஒரு சம்பவம் நிஜமாகாது.
இதே சின்மயி, டிவிட்டரில், தன்னுடைய ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதற்கும், தன்னைப்பற்றி கீழ்தரமாகவும் எழுதியதற்கு காரணமான 6 நபர்களை கைது செய்யவேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் இரண்டு டிவிட்டர் உபயோகப்படுத்தும் நபர்களை கைது செயதனர். ஆறு பேரில் லாஸ் ஏஞ்சலஸ் நகரை சார்ந்த எழுத்தாளர் ராம் என்பவரும் ஒருவர். தன் மீதான புகார் தவறானது எனவும், அதனால் தான் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அதை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு போடவேண்டி வரும் என கூறினார். சின்மயி அத்துடன் பதுங்கிக்கொண்டார் என்பது கடந்த கால உண்மை.
இங்கு வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆளும் வர்க்கத்திடம் மதிப்பு இருக்கிறது என்பதால் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். வழக்கு நடைமுறைக்கு செல்லாமல் வழக்காறாகவே அதை தொடர்கிறார்.
அதிகார வர்க்கம் இதுபோன்ற சிலரை கையில் வைத்திருப்பதும், அவ்வப்போது பயன்படுத்துவதும் யாரும் அறியாததல்ல.
அபப்டித்தான் அரசை விமர்சித்த தருண் தேஜ்பால் மீது புகார் செய்தார் அவருக்கு கீழே பணியாற்றிய பெண். 7 ஆண்டுகள் தருண் தேஜ்பால் வாழ்க்கை சீர்குலைந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி அவர் வழக்கிலிருந்து முழுமையாக வெளிவந்துள்ளார்.
குற்றச்சாட்டை பொதுவெளியில் வைப்பதை விட, சட்ட மையங்களில் முன்வைத்து வெற்றி பெறுங்கள், அவதூறுக்கல்ல, உங்கள் அவமானத்தை துடைப்பதற்கே புகாரை பயன்படுத்துங்கள் என்பதே இத்தகையவர்களுக்கு வழங்கும் ஆலோசனை.
அதேவேளை, விருது அளிப்பதாக ஆசை காட்டி, பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக வைரமுத்துவை அவமதித்திருப்பதை ஏற்பதற்கில்லை. விருது வைரமுத்துவின் எழுத்துக்குத்தான் என்று குழுத்தலைவரே கூறிய பின்பு திரும்பப் பெற்றது அவமதிப்பே. வைரமுத்துவும், விருதை திரும்ப வழங்குகிறேன், பரிசை அரசுக்கு வழங்குகிறேன், என்று காமெடி செய்யாமல், ‘ எண்பிக்கப்பட்ட எனது எழுத்தாற்றலை மதிக்காமல், எண்பிக்கப்படாத என் மீதான குற்றச்சாட்டை மதிக்கும் விருதுக்குழுவினரின் பரிந்துரையை நிராகரிக்கிறேன்’ என்று கெத்தாக கூறவேண்டும்.
ஆனால், அவர் இருக்கிற இடமும், வகிக்கிற பாத்திரமும் அவ்வளவு ஆளுமையுடன் பேசவிடாது என்றே தெரிகிறது.