புகழேந்திப் புலவர் மஹாபாரதக் கதையின் உப கதையான நளன் சரித்திரத்தை வெண்பாக்களாக இயற்றி அரசன் குலோத்துங்க சோழனுடைய சபையில் அரங்கேற்றினார் அரங்கேற்றத்தின்போது அதில் முக்கியப் பங்கு வகித்த ஒட்டக் கூத்தர் இடையிடையே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல் வேண்டுமென்றே குற்றங் குறை கூறி வாங்கிக்கட்டிக் கொண்ட கதை இது
நள வெண்பாவில் மாலைக்காலத்தை ஒரு அழகிய மங்கையாய் வர்ணிக்கும் விதமாய் அமைந்த பாடலொன்று வருகிறது.
மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது
மல்லிகை மலரில் வண்டு தேனுண்ண, மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து பாய்ந்த மலர்க்கணைகள் பட்டு மாந்தர் யாவரும் மெய்மறந்திருக்க முல்லை மலராலான மென்மையான மாலையை அணித்து மாலைப்பொழுது ஒரு மங்கையைப் போல் நடந்ததாக மாலைக்காலத்தை வர்ணித்துப் பாடுகையில் மல்லிகை மலரில் வண்டு வந்தமர்ந்து தேனுண்ணும் காட்சி ஒரு வெண்சங்கினை வாயில் வைத்து ஊதுவது போலிருப்பதாக இப்பாடலில் அவர் கற்பனை செய்து பாடுகிறார்.
அவையில் வீற்றிருந்த உடனே ஒட்டக்கூத்தர் மறுப்புத் தெரிவித்து “சங்கை ஊதுபவர்கள் அதன் சூத்தைத் தான் (பிற்பகுதியை) வாயில் வைத்து ஊதுவார்களே தவிர, சங்கின் வாய்ப் பகுதியில் வாய் வைத்து ஊதுவதில்ல. ஆனால் வண்டு மலரின் வாய்ப் பகுதியின் வழியாகத் தானே தேனருந்துகிறது. ஆகவே இவ்வுவமானம் தவறு. பாடலில் பொருட்குற்றமுள்ளது, அதனால் இதை ஏற்பதற்கில்லை.” என்று தெரிவித்தார்
இதற்கு மறுமொழியுரைத்த புகழேந்திப் புலவர், “கட்குடியனுக்கு வாயென்றும் சூத்தென்றும் தெரியுமோ? நீர் தான் சொல்லும்” என்று கேட்க ஒட்டக்கூத்தர் வாயடைத்துப் போய் விட்டார். அதாவது மல்லிகையின் மலரிலுள்ள தேனை அருந்தும் மயக்கத்தில் உள்ள வண்டுக்கு வாயென்றும் சூத்தென்றும் எவ்வாறு தெரியும்? நியாயம் தானே?