நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு வருவாய் ஊழியர் சங்க கட்டட வளாகத்தில் வேணாடு இலக்கிய கூடுகை சார்பில், இதழாளரும் எழுத்தாளருமான அய்கோ எழுதிய ‘ குலம் காக்கும் தெய்வங்கள்’ நூல் அறிமுக விழா நடந்தது.
இக்கூடுகையில் பெய்யென பெய்த மழை கச்சத்தோடு தக்கலை கென்னடி வரவேற்றார். நாட்டுப்புறவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் அ.க.பெருமாள், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மொழிப்புல முதல்வர் பிரபாகர், முன்னேற்றப் பதிப்பகம் உரிமையாளர் வீரபாலன், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுவாமிநாதன், முதற் சங்கு இதழ் ஆசிரியர் சிவனி சதீஷ் ஆகியோர் பேசினர்.
இதில், வழக்கறிஞர்கள் திருத்தமிழ்த்தேவனார், டி.வி.பாலசுப்பிரமணியம், அகரம் தமிழர் கட்சி தலைவி குயிலிநாச்சினியார், குமரி போஸ், சிவகாசி செல்வன், நெல்லை சிவா, மற்றும் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பதிப்பாளர் வீரபாலன், பத்திரிக்கையாளர்கள் சுவாமி நாதன், சிவனி சதீஷ் ஆகியோர் பேசுகையில்,’ குலதெய்வ வழிபாட்டைப் பற்றி அரிய, புதிய தகவல்களை இந்த நூலில் அய்கோ ஏராளமாக தந்திருக்கிறார்’ என்றனர்.
முனைவர் பிரபாகரன் பேசுகையில்,’ நம்முடைய தெய்வங்களை மேல்நிலையாக்கம் செய்து நமக்கே அந்நியம் ஆக்கிவிட்டார்கள். இதை சாமி மாற்றம், நடை முறை மாறுபாடு போன்ற அத்தியாயங்களில் அய்கோ அருமையாக விவரித்திருக்கிறார். பெரும் சமயங்களிலும், பிற மதங்களிலும் குலதெய்வ வழிபாட்டு கூறுகள் எவ்வாறு கலந்திருக்கின்றன என்பதையும் அலசி ஆராய்ந்திருக்கிறார் ‘ என்றார் .
ஆய்வாளர் அ.க.பெருமாள் பேசுகையில், ‘ அய்கோ இந்த நூலுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். வட்டார பண்பாடாக அங்கங்கு துலங்கும் குல தெய்வ வழிபாடு ஒரு நூலிழையில் இணையும். அதை இந்த நூலில் அவர் புலப்படுத்தியிருக்கிறார். 8, 10 நூல்களாக இயற்றவேண்டிய விடயங்களை ஒரே நூலாக்கி கொடுத்துள்ளார்.
பொதுவாக இரண்டு மணி நேரம் வேலை செய்யும் கல்லூரி பேராசிரியர்கள் மாதம் ஒன்றரை லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் நிறைய படிக்கவேண்டும், ஆராய்ச்சி செய்யவேண்டும், தங்கள் துறைகளில் நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவே அப்படி சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், சிலர் அப்படி எவ்வித எழுத்துப் பணியும் ஆய்வுப் பணியும் மேற்கொள்வதில்லை. அந்த வேலையை அய்கோ போன்றவர்கள் செய்கிறார்கள்’ என்றார்.
முன்னதாக, முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியாக அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தினர்.