கடந்த சில மாதங்களாக ராணிப்பேட்டை, வாலாஜா, சிப்காட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்தது.
இதனையடுத்து ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை ஆய்வாளர் சாலமன் தலைமையிலான குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற இரு சக்கர வாகன திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சிசிடிவி காட்சியின் உதவியோடு காவலாதுறையினர் சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் மாதனூர் அடுத்த காலா புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், குடியாத்தம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பதுங்கி இருந்த தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.
இவர் மீது குடியாத்தம், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஊரடங்கு காலத்தில் அவசர அவசரமாக கடைகளுக்கு செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் சாவியை மறந்து விட்டு செல்வதை நோட்டமிட்டு அதனை, கூட்ட நெரிசலில் மிக்க பகுதிகளில் சுலபமாக திருடி செல்வது இவரது வாடிக்கையாக இருந்து வந்தது.
அவரிடமிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான 3உயர் ரக பைக் உள்ளிட்ட 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த ராணிப்பேட்டை போலீசார் அவற்றை இருசக்கர வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.














