சேலம் கருப்பூர் வெள்ளாளப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள நீரோடையின் மேலே இருந்த சிறிய பாலம் வழியாக வட்டக்காடு, வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, செங்கரடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் வரும்போது பாலத்தை கடப்பதற்கு சிரமமானது.
இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நீரோடையின் மேலே புதிய பாலம் கட்டும் பணியை தொடங்கினர். நேற்று பாலத்தின் மேற்பரப்பில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கான பணி நடந்தபோது வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து பாலம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பணியையும் தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கருப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் ரஞ்சித்குமார், கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘இந்த பாலம் கட்டுவதற்காக மக்கள் விருப்பத்துக்கு மாறாகவும், ஒரு சிலருக்கு ஆதரவாகவும் அளவீடு செய்யப்பட்டது. முறையாக அளவீடு செய்து பாலத்தை கட்டவேண்டும்’ என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ‘உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.














