அமைச்சர்கள் கைது மம்தா தர்ணா கொல்கொத்தா சிபிஐ அலுவலகம் மீது கல்வீச்சு

0
1294

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி கடந்த 5ஆம் தேதி பதவியேற்றார்.

அவர் பதவியேற்ற இரு வாரங்கள் கூட முடியாத நிலையில் நேற்று அம்மாநிலத்தின் அமைச்சர்களும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.

2017ஆம் ஆண்டைய சம்பவத்துக்காக நாரதா ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் அம்மாநில அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், சுபத்ரா முகர்ஜி ஆகியோரையும் திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா வையும் கொல்கத்தாவில் உள்ள அவரவர் வீடுகளுக்கு சென்று கைது செய்தது. மேலும் முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன்சாட்டர்ஜியும் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

இவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து, சட்டமன்ற தேர்தலில் சீட்டு கிடைக்காததால் அங்கிருந்தும் வெளியேறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு ஸ்டிங் ஆபரேஷனின் போது அதில் ஈடுபட்டவர்களிடம் ஆபரேட்டரிடமிருந்து சட்டவிரோதமாக லஞ்சம் பெறும்போது சிக்கியவர்களையே கைது செய்ததாக சிபிஐ கூறுகிறது.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2017 ஏப்ரல் 16ல் வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்கு பின்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரப்பட்டது. 2021 மே 7 அன்று மேற்கு வங்க ஆளுநரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என சிபிஐ தெரிவித்துள்ளது.


அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காலை 11 மணிக்கு கொல்கத்தா சிபிஐ அலுவலகத்துக்கு வந்தார். தகவல் அறிந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் சிபிஐ அலுவலகத்துக்கு முன் குவிந்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய பாஜக அரசு சிபிஐ மூலம் கைது செய்திருக்கிறது என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர். ’சபாநாயகர் அனுமதி பெறாமல், பெற்றதாக கூறி அமைச்சர்களை கைது செய்ததாக மம்தா குற்றஞ்சாட்டினார். ’ என்னையும் கைது செய்யுங்கள்’ என்று சிபிஐ அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.


ஆனால் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நால்வரையும் பகல் 11.30 மணிக்கு பேங்க்‌ஷால் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த நேரத்தில் சிபிஐ அலுவலகத்திற்குள் கற்கள் வீசப்பட்டன. மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். கட்சியினரும் அவருடன் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


ஆளுநர் ஜெகதீப் தங்கர், ’சிபிஐ அலுவலகத்தில் கற்கள் வீசப்படுகின்றன. அங்கே நடக்கும் சட்டமீறல்களை மேற்கு வங்காள போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மம்தா பானர்ஜி அரசியல் அமைப்பு சட்டத்தை பின்பற்றி நடக்க வேண்டும்’ என்று பிற்பகல் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.


இந்நிலையில் பிற்பகல் 1.45மணிக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு மனு அளிக்கப்பட்டது. ’ மாநில அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here