குலம் காக்கும் தெய்வங்கள் 15

0
714

இசக்கியர் வரிசையில் மாவிசக்கி கதை கொஞ்சம் வித்தியாசமானது. இதுவும் கற்பை காத்துக்கொள்ள போராடிய பெண்ணின் கதைதான் என்றாலும், சுடலையாண்டவர் கதையோடு தொடர்புடையது.
சிவனை பார்வதி தேவி சோதிப்பதும், இறுதியில் தோற்பதும், அதன் பலனாக சாபம் பெற்று தவிப்பதும் சிவபுராண சேதி. அவ்வாறே ஒரு நாள், ‘படைத்த உயிர்களுக்கெல்லாம் பரமன் படியளக்கிறாரா?’ என்று சோதிக்க எண்ணிய பார்வதி தேவி, எறும்பொன்றை பிடித்து சிமிழில் அடைத்துவைத்தாள்.
பூமி ஷேமம் தெரிந்துகொண்டு கயிலாயம் வந்த பரமனிடம் , ‘ எல்லா உயிர்களுக்கும் படியளந்துவிட்டீர்களா? ’ என்று பகடியாக கேட்டாள் பார்வதி. ஆமென்று ஈசன் சொன்னதும், சிமிழில் அடைத்த எறும்பை காட்டி, ‘ இதற்கு படியளந்தீரா? ’ என்று வினவ, ’கூர்ந்து பார் தெரியும்’ என்றார் ஈஸ்வரன். உற்றுப்பார்த்தால், எறும்பின் வாயில் ஓர் அரிசி இருந்தது. பார்வதி பதைத்தாள். பரமசிவனோ கொதித்தார். சோதித்த மனையாளை பூலோகம் சென்று வனப்பேய்ச்சியாய் அலைய சபித்தார்.
பூவுலகில் பேய்ச்சியாய் சுற்றிய தேவி செய்த தவத்தால் மனமிரங்கிய இறைவன், வேண்டும் வரம் கேட்கச்சொன்னார். மலைமகளோ, இரு பிள்ளைகள் பிறந்தும் நம் இருவரோடுமில்லை. எனவே, பிள்ளை வரம் வேண்டுமென்றாள்.
மயானத்தருகே நின்று முந்தானையை ஏந்தச்சொன்னார் மகாதேவர். எரிந்த சுடலையின் பொறியொன்று விழுந்து வடிவற்ற முண்டமாய் உயிர் கொண்டது. முண்டனை பர்த்து முதுதேவி வேதனை கொள்ள, அழகிய உருவம் அளித்து சுடலையாக ஆக்கினார் ஐயன். முண்டமாகப் பிறந்த குழந்தைக்கு முண்டனென்றும், சுடலை முத்துக்களால் பிறந்ததால் சுடலைமாடன் என்றும் பெயரிட்டனர்.
சுடலையில் உதித்த பூர்வ வாசத்தால் குழந்தை பிணம் தின்னத் தொடங்கியது. அதையறிந்த பார்வதி இறைவனிடம் முறையிட, சுடலையை பூலோகம் அனுப்பினார் இறைவன். சுடலையும் விடவில்லை. ‘ எனக்கு எட்டாத பரண் போட்டு அதில் எட்டு அடுக்குகளில் படையல் இடவேண்டும்’ என வரம் கேட்டுப்பெற்ற பின்னரே வல்லயம், வீச்சரிவாள், பொந்தந்தடியை ஏந்தியவாறு பூமிக்கு வந்தார்.
இங்கு சிவாலயங்கள் ஆயிரத்தெட்டும், திருப்பதிகள் நூற்றியெட்டும் தரிசித்துவிட்டு பேச்சிப்பாறை அருகே கொட்டாரக் கரையை அடைந்தார். அங்கிருந்த பகவதியம்மன் கோயிலில் தங்கப் புதையலுக்குக் காவல் இருந்தார்.
அப்போது மலையாள தேசத்திலே நந்தம்புனலூர் என்ற ஊரில் நான்கு சாலியர் தெருவில் 1008 வீட்டு புலையன்மார் வசித்துவந்தனர். அவர்களின் தலைவன் காளிப்புலையன். அவனும் அவன் கூட்டத்தாரும் மந்திர, தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் வானத்தை வில்லாக வளைப்பார்கள். மணலிலேயே கயிறு திரிப்பார்கள். உரலுக்குள் மையை வைத்து அதை ஊரெல்லாம் சுற்றவிடுவார்கள்.
காளிப்புலையனின் மனைவி புலக்கொடியாள். மணந்து பல்லாண்டுகள் ஆகியும் மகவில்லாத புலக்கொடியாள் கணவன் காளிப் புலையன் ஆலோசனைப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருந்து ஈஸ்வரியம்மனை வணங்கிவந்தாள்.
அந்த சமயத்தில் காகமொன்று மாவுருண்டையைக் கவ்விக்கொண்டு பறந்து வந்தது. அந்த மாவுருண்டை கையேந்தி தவமிருந்த புலக்கொடியாளின் கைகளில் விழுந்தது. புலக்கொடியாள் அதை உண்டாள். கருக்கொண்டாள். பத்தாம் மாதம் அழகிய பெண்மகவைப் பெற்றெடுத்தாள். மாவுருண்டைப் பிரசாதத்தால் பிறந்த குழந்தைக்கு குலதெய்வமான இசக்கியின் பெயரை இணைத்து மாவிசக்கி என்று பெயரிட்டனர்.


பன்னிரண்டாம் வயதில் பருவமெய்திய மாவிசக்கியை கைவசமிருந்த ஆபரணங்களால் அலங்கரித்தும் காளிப்புலையனுக்கு மன நிறைவில்லை. இன்னமும் பொன்னும் ஆபரணமும் புனைந்து அழகு பார்க்க ஆசைப்பட்டான். அஞ்சன மைபோட்டு பார்த்தபோது கொட்டாரக்கரை பகவதியின் ஆலயத்தில் ஏழு கடாரம் (அண்டா) பொன் புதைந்திருப்பது தெரியவந்தது.
அதை கொள்ளையிட ஆவல் கொண்டான். ஆனால், சுடலை காவல் இருக்கிறானே என்று கலங்கினான். வெள்ளிக்கிழமை இரவில் சுடலை மாடன் மயான வேட்டைக்குக் கிளம்பியதும் உள்ளே சென்று ஒரு கடாரம் பொன்னைக் கொள்ளையடித்து விட்டான்.
மயான வேட்டைக்குச் சென்ற சுடலை திரும்பி வந்து ஏழு கடாரத்தில் ஒன்று குறைந்ததைக் கண்டு கொதிப்படைந்து, யாரிதை செய்தது என்று பகவதியம்மனிடம் வினவினார். அவள் ‘காளிப்புலையன் தான் களவு செய்தான். ஆனாலும், அவனை பகைக்கவேண்டாம். அந்த புலையர்கள் தெருவுக்கு சென்றவர்கள் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை’ என்றாள்.
ஆனாலும் அஞ்சாத சுடலை, ‘ களவெடுத்துப் போனவனை கருவறுத்து வருகிறேன்’ என்று சவாலிட்டு புறப்பட்டார். திருநீறிட்டு வல்லயத்தை கையில் கொடுத்து வழியனுப்பினாள் பகவதித்தாய்.
தனது சுய ரூபத்தை களைந்து, பாம்பாட்டியாக வேடம் புனைந்து காட்டில் பிடித்த பாம்புகளோடு நந்தம்புனலூர் சென்றார். அவர் தெருவில் பாம்பு வித்தை காட்டியதை தன் வீட்டின் மாடியில் நின்று மாவிசக்கி கவனித்துக் கொண்டிருந்தாள்.


அவள் கவனத்தை மேலும் ஈர்க்க எண்ணி வயதான பண்டார உருவெடுத்து காளிப்புலையன் வீட்டுக்கு சென்று பிச்சை கேட்டார். மாவிசக்கி பிச்சையிட அன்னம் எடுத்துக் கொண்டு தெற்கு வாசலுக்கு வந்தால், சுடலை வடக்கு வாசலுக்குச் சென்றார். வடக்கு வாசலுக்கு வந்தால், தெற்கு வாசலுக்கு சென்றார்.
இவ்வாறு அலைக்கழித்ததால் ஆத்திரமடைந்த மாவிசக்கி ‘அடேய் கிழட்டுப் பண்டாரமே… பிச்சை எடுக்க வந்தால் கொடுத்ததை வாங்கிக்கொண்டு போவது தானே?’ என்று கோபத்துடன் கேட்டாள். சுடலையோ, ‘ பெண்ணே நான் பிச்சை கேட்டு வரவில்லை. உன்னைப் பெண் கேட்டு வந்தேன்’ என்றார்.
‘என் தந்தை வந்தால் உன் தலை இருக்காது’ என்று மாவிசக்கி எச்சரித்தாள். ‘இன்றிலிருந்து எட்டாம் நாள், உன் அப்பன் இருக்கும் போதே யாரும் அறியாமல் உன்னை உறவுறுவேன்’ என்று சபதமிட்டு மறைந்தார் சுடலை.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாவிசக்கி தன் தந்தையிடம் சொல்ல, காளிப் புலையனும் மை போட்டுப் பர்த்தான். சுடலையென்று அறிந்ததும் அச்சம் கொண்டான். ஈயும் நுழையாத ஏழடுக்கு மளிகைக்குள் மாவிசக்கியை வைத்து பாதுகாத்தான்.
எட்டாம் நாள் சாமம், இட்ட சபதம் முடிக்க புலையனின் கோட்டைக்குள் எறும்பு ரூபமெடுத்து நுழைந்த சுடலை, மாவிசக்கியை கூடி சபதம் முடித்தார். அடுத்து, காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே மத யானை போல நுழைந்து புலையர்கள் செய்த விவசாய பயிர்களை சர்வநாசம் செய்தார்.
கேட்பதை கொடுக்காவிட்டால் இன்னும் சுடலை ஆட்டத்தை நிறுத்த மாட்டான் என்றறிந்த காளிப்புலையன், மீண்டும் வெற்றிலையில் மை போட்டு சுடலையை அழைத்தான். ‘உன் சினம் தீர என்ன வேண்டும்?’ என்று கேட்டான். ‘நீ யாருக்காக எனது கட்டுக்காவலை மீறி பகவதி அம்மையின் திரவியத்தை களவெடுத்தாயோ, அந்த மாவிசக்கியை கருவோடு கொடிபுடுங்கி எனக்கு நரபூசை கொடுத்தால் உன் கட்டுக்குள் நிற்பேன். இல்லையென்றால் உன்னையும் மேவி அழிப்பேன்’ என்றார்.
எப்படியோ தான் தப்பினால் போதும் என்று எண்ணிய காளிப்புலையன், காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே ஏழு பரண் போட்டு ஏழுவிதமான பலிகளை கொடுத்தான். இறுதியில் தவமிருந்து பெற்ற மகளென்றும் பாராமல், சூலியான மாவிசக்கியை பரணின்மேல் கிடத்தி, கை கால்களை கட்டி, அவளது வயிற்றை கிழிக்கவந்தான். அப்போதுதான் தந்தையே தன்னை பலி கொடுக்கப் போவது மாவிசக்கிக்கு புலனானது.
‘ சண்டாளப் புலையனே, பெருமையாய் வளர்த்த என்னை பேய் படைக்கு பலிகொடுக்க துணிந்துவிட்டாயே’ என்று அழுது, அரற்றி, நொந்து சாபமிட்டாள். ஆனாலும் அவளை பலியிடாது போனால் தன்னுயிர் தப்பாது என்று பயந்த புலையன், மாவிசக்கியின் வயிற்றை கிழித்து, கருவை பிடுங்கி தலைவாழை இலையில் வைத்து சுடலைக்கு படைத்தான்.
படையலை ஏற்ற சுடலை அவன் சொல்லுக்கு கட்டுப்படுவது போல் ஒரு சிமிழுக்குள் நுழைந்தார். சுடலை அடைபட்ட சிமிழை புலையன் ஒரு குளத்திற்குள் புதைத்தான். குளத்திற்கு தண்ணீர் எடுக்கவந்த புலையன் மனைவியின் குடத்துக்குள் அந்தச் சிமிழ் புகுந்தது.
வீட்டுக்கு கொண்டுவந்ததும் குடத்திலிருந்து துள்ளி புலையனின் இடது தொடையில் சிமிழோடு அமர்ந்தார் சுடலை. பயந்து போன புலையன், சிமிழை உரலில் இட்டு இரும்பு உலக்கையால் இடிக்க, சிமிழ் உடைந்து வெளிப்பட்ட சுடலை வல்லயத்தால் புலையனை ஒரே அடியாக அடித்து ஊட்டியை முறித்து உதிரத்தை குடித்தார். அவனது மனைவியையும் அழித்துவிட்டு புலையன் திருடிய தங்க கடாரத்தோடு பகவதியம்மன் ஆலயம் சென்றார்.
தந்தையின் களவால் தன்னுயிர் இழந்த மாவிசக்கி, துஷ்ட தெய்வமாக நிலையம் கொண்டு தென்னகத்தில் வாசம் செய்கிறாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here