முன்பெல்லாம் ஒருசில தொகுதிகளில் ஓரளவு செல்வாக்குள்ள சின்னச்சின்ன சில்லரை கட்சிகள் பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறிக்கும். 500 முதல் 5 ஆயிரம் வாக்குகள் அந்த கட்சிகளின் பலமாக இருக்கும்.
முன்பு ஒரு தொகுதிக்கு 600, 700 தபால் வாக்குகள் தாம் இருக்கும். இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து தபால் வாக்குகள் அதிகரித்து விட்டன. ஒவ்வொரு தொகுதிக்கும் 1,000 முதல் 5 ஆயிரம் தபால் வாக்குகள் இருக்கின்றன. பலத்த போட்டி உள்ள நூற்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் தபால் வாக்குகளுக்கு குறைவான அன்பளிப்பு கொடுத்த வேட்பாளர்களுக்கு இப்போது நெஞ்சு திக், திக்கென அடித்துக்கொள்கிறது.
ஆளுங்கட்சி சார்பில் தபால் வாக்குகளை கவர பணம், அதிகார தலையீடு எல்லாம் செய்யப்பட்டது. ஒரு தபால் வாக்கு மதிப்பு ரூ.500 முதல் 5 ஆயிரம் வரை இருந்தது. சில இடங்களில் முதியவர்கள், ,மாற்று திறணாளிகளை பராமரிக்கும் உறவினர்களைக் கூட அணுகவி டாமல் அதிகாரிகளே வாக்கு அறுவடை செய்தனர். இதனால் பல வேட்பாளர்கள் பயத்துடனேயே இருந்தனர்.
ஆனாலும், தபால் வாக்குகளை சில காரணங்களுக்காக தள்ளுபடி செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்காக 10 காரணங்களை வெளியிட்டிருக்கிறது.

1. ‘13-‘படிவத்தில் உறுதிமொழி இல்லாமல் இருந்தால் தள்ளுபடி செய்ய வேண்டும். 2. உறுதிமொழியில் வாக்காளரால் முறைப்படி கையொப்பமிடப்படாமல் இருந்தாலோ, சான்றொப்பமிட அதிகாரமுடைய அலுவலரால் முறைப்படி சான்றொப்பமிடப்படாமல் இருந்தாலோ நிராகரிக்கலாம். 3. உறுதிமொழியின் மீது காணப்படும் வாக்குச்சீட்டின் தொடர் எண், படிவம், ‘13-‘இன் உள் உறையில் மேலொப்பமிடப்பட்ட தொடர் எண்ணிலிருந்து வேறுப்பட்டிருந்தால் நிராகரிக்கலாம்.
4. எந்த ஒரு வாக்கும் அதில் பதிவு செய்யப்படாமல் இருந்தால் அது செல்லாது. 5. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருப்பின் செல்லாது. 6. போலியான வாக்குச் சீட்டாக இருந்தால் அது செல்லாது.7. வாக்குச் சீட்டு உண்மையானது என்பதை நிரூபிக்க இயலாத வகையில் சேதமடைந்திருந்தால் நிராகரிக்கப்படும். 8. தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்காளருக்கு அனுப்பப்பட்ட உறையுடன் அது திருப்பி அனுப்பப்படவில்லையாயின் நிராகரிக்கலாம்.
9. எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஐயத்திற்கிடமாக இருக்கும் வகையில் வாக்குச்சீட்டில் உள்ள குறி இருக்குமாயின் அது செல்லாது. 10. வாக்களிப்பவரை இன்னாரென்று அடையாளம் காட்டும் வகையில் அடையாளக்குறியீடு அல்லது சொற்றொடர் எவையும் எழுதப்பட்டிருப்பின் அத்தகைய வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும்,
இவ்வாறு தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.













