இறப்பு வரை, கல்யாணம், சடங்கு, கருமாதி என எவ்வித பேதமும் பாராமல் வரிகள் போட்டு மக்களை வாட்டுவது சர்வாதிகார அரசின் எதேச்சதிகார வேலை.
வாகனம் வாங்கும்போதே சாலை வரி உண்டு. பெட்ரோ, டீசல் விற்பனையிலும் அதற்கான வரி உண்டு. ஆனாலும், நெடுஞ்சாலைகளை அமைத்து அதில் தனியாரை காவல் வைத்து காசு பறிக்கும் களவாணி வேலையை மைய அரசு தொடர்ந்து செய்துவருகிறது.
பணம் பறிப்பு உண்டே தவிர, சாலை பராமரிப்பு இல்லை. ஆனாலும், காலக்கெடு முடிந்த பின்பும் வசூலை நிறுத்தாத கடமை வீரர்கள், இரு சுங்கச்சாவடிகளுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளியையும் குறைத்துவிட்டனர்.
தூரம் குறைகிறதே ஒழிய அபராதம் குறையவில்லை. ஆண்டுக்காண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வைப்போல சுங்க கட்டண உயர்வும் அமலாகிறது.
பயன்படுத்தாத சாலைக்கு கட்டணம், பராமரிக்காத சாலைக்கு கட்டணம், சட்ட வரையறைக்குள் வராத சாலைக்கு கட்டணம் என்று போட்டு தாக்குகிறார்கள்.
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வேலூர் மாவட்டத்தின் வழியாக செல்கிறது. இதில், வாணியம்பாடி – பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால், பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தாமல் நேரடியாக பள்ளிகொண்டா சுங்கச் சாவடியை வந்தடைகின்றன. எனவே, அவை கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், அவ்வாறு சாலையைப் பயன்படுத்தாத வாகனதாரரையும் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துகின்றனர். சுமார் 13 ஆண்டுகளாக இந்த பகல் கொள்ளை நடந்துள்ளது. தற்போது அதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்.
இதேபோல், சட்டத்துக்கு புறம்பாக சுங்க வசூல் நடக்கும் மதுரை சாலையை பற்றி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘மதுரை முதல் ராமேஸ்வரம் வரை 76 கிலோ மீட்டர் தொலைவில் நான்கு வழி சாலை பயன்பாட்டில் உள்ளது. பரமக்குடி முதல் ராமேஸ்வரம் வரை 99 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை. பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை சுமார் 18 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை தரமற்றதாக உள்ளது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திடீரென போகலூர் கிராமத்தில் சுங்கச் சாவடி மையம் அமைத்து வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்த இடத்தில் சுங்கச் சாவடி அமைப்பது தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது.
இந்த சுங்கச் சாவடி மையத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் விதிவிலக்கு பட்டியலில் வரும் வாகனங்கள் செல்வதற்கு தனிப் பாதை வசதியில்லை. நெடுஞ்சாலை ரோந்து வாகனம், கிரேன், கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. எனவே போகலூர் சுங்கச்சாவடி மையத்தை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்’என்று கோரியிருந்தார்.
அதாவது, மதுரை- ரமேஸ்வரம் சாலை 75 கிலோ மீட்டர் வரை நான்கு வழிச் சாலையாகவும், 76 கிலோ மீட்டரிலிருந்து 99 கிலோ மீட்டர் தூரம் வரை இருவழிச் சாலையாகவும் உள்ளது. புதிதாக சாலை அமைக்காமல் பழைய சாலையை பழுதுபார்த்துள்ளனர். இரு வழிச்சாலைக்கு நான்கு வழிச்சாலைக்கான கட்டணம் வசூலிக்கின்றனர் என்பதே வழக்கின் சாரம்.
மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘ இருவழிச் சாலையில் செல்ல நான்கு வழிச் சாலைக்கான சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்?’ என கேள்வி எழுப்பினர். அத்துடன் இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.













