அவ்வையாரம்மன் எனப்படும் கிழவியம்மன் வழிபாடு தென்தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் உள்ளது. அவ்வாறே, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் கிராமம், வழிப்பூலாங்குளத்தில் கொற்றவை (சக்தி) வழிபாட்டுடன் அவ்வையார் (கிழவியம்மன்) வழிபாடும் உள்ளது. அவ்வையாரை திருமண வரத்துக்காகவும், குடும்ப நலனுக்காகவும் வணங்குவர். குறிப்பாக, பெண்கள் தனியாக கூடி, கொழுக்கட்டை அவித்துப் படைத்து கொண்டாடுகின்றனர். அவ்வை தமிழர்களின் அறிவுத்தெய்வமாகவும் கருதப்படுகிறார்.
வழிப்பூலாங்குளம் கிழவியம்மன் வழிபாடு அவ்வையாரம்மன் வழிபாடாகவும் செல்வியம்மன் (கன்னி தெய்வம்) வழிபாடாகவும் விளங்குகிறது. அங்கு சக்தி, பகவதி வழிபாடும் முற்காலங்களில் நடந்துள்ளது. தற்போது இரு நாட்களுக்கு முன்பு அங்கு கிழவியம்மன் கொடை விழா நடந்தது.

காலை அம்மனுக்கு திரு நீராட்டு, அலங்காரம், பூப் படையல், நூல் (புத்தகம்)படையல் செய்யப்பட்டது.
பின்னர் கொழுக்கட்டை, பனியாரம் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கூழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
இரவில் நெல்லை பொதிகை தற்காப்பு கலைக்கூடத்தின் சிலம்ப விளையாட்டு, வாள்வீச்சு, தீச்சிலம்பம் நடைபெற்றது. இள முனைவர் கி. பிரபா, அவ்வையாரம்மன் பற்றி சொற்பொழிவாற்றினார். பொது விருந்தும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அகரம் தமிழர் கட்சி தலைவி குயிலி நாச்சியார், சிலம்ப, வர்ம ஆசான் கண்ணன், நெடுஞ்சாலைத்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர் போனிபாஸ், கோமாநேரி ஊராட்சித் தலைவர் கலுங்கடி, துணைத் தலைவர் ஹைகோர்ட் துரை, ஊர் பிரமுகர் எலியாஸ், சுற்றுச்சூழல் இயக்க பொறுப்பாளர் குணசீலன், கொம்பன் குளம் ஊராட்சி உறுப்பினர் ஆத்திப் பாண்டி, கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் அனந்த பெருமாள், திமுக கிளை பொறுப்பாளர்கள் பால்ராஜ், லூக்காஸ், வட்டார மக்கள் நலக்குழு பொறுப்பாளர்கள் ஆ.சு.மணி, வீரபாண்டி, லாசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டை சாமிக்கண் பண்ணையார் குடும்ப ஆலயங்களின் தக்கார் இதழாளர் அய்கோ, விழாக்குழு தலைவர் சா.மு.ராமசாமி நாடார், உறுப்பினர்கள் குருசாமி நாடார், உத்திரகுமார், தங்கரத்தினம், பூபாலன், வெள்ளத்துரை, கோயில் திருப்பணிவிடையாளர் பூங்குன்றன் ஆகியோர் செய்திருந்தனர்.









