பில் இருந்தால் பிழையில்லை: அண்ணாமலையின் கடிகாரமும் அமைச்சர்களின் வருமானமும்

0
361


காந்தி , எம்ஜிஆர் கடிகாரத்துக்கு பிறகு இந்திய அரசியலில் ‘ அலார்ம் ’ அடிப்பது அண்ணாமலை வாட்ச் தான். உதயநிதி கைக்கடிகாரத்தை பதிலுக்கு சொன்னாலும், முதலில் கேள்வியை எதிர்கொண்ட அண்ணாமலை ஒரே வார்த்தையில் விடையளித்து கேட்டவர் வாயை மூடியிருக்கலாம்.

ஆனால், ‘அதற்கு இது பதில் இல்லையே?’ என்பது போல் எதையெதையோ சொல்லி மழுப்புவது வெளிப்படையாக தெரிகிறது. அயல்நாடாம் ஃபிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் ஆயுதம், ரஃபேல் கடிகாரம் போன்றவற்றை தேச பக்திக்கு ஆதாரமாக காட்டுமளவு அவர் குழம்பிப்போயிருப்பது அப்பட்டமாக பேச்சியில் வெளிப்படுகிறது.

தனது வெளிநாட்டு வாட்ச்சை அவிழ்த்து வீசிவிட்டு தான் சுதேசி பயணத்தை வ.உ.சி தொடங்கினார் என்ற வரலாற்றை அண்ணாமலை அறிந்திருக்க நியாயம் இல்லை. ஆனாலும், அன்னிய நாட்டு கடிகாரத்தையே தேசிய உணர்வுக்கு அடையாளமாக காட்டியதோடு,’என் உயிருள்ளவரை இதை அணிந்திருப்பேன்..’ என்று விசுவாச பிரமாணம் எடுப்பதெல்லாம் அதீதம் (டூ மச்).

அது மட்டுமல்ல, அரசியலுக்கு வந்துவிட்டபின்பு ஆடை, அணிகலன், வாகனம், வசதி பற்றியெல்லாம் கேள்வி எழுவது வழமை. அதற்கு பதிலளிப்பது கடமை. அந்த பதிலுக்கு ஏற்றாற்போல் புலப்படும் பெருமை.

கிழிந்த சட்டை பகுதியை துண்டால் மறைத்த காமராஜரிடம், ‘ ஏன் துண்டை அப்படி அணிந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டு தொந்தரவு செய்தபோது, அதை விலக்கி காட்டி, ‘ இதனால் தான் அணிந்திருக்கிறேன்’ என்று பதிலளித்து சந்தேகத்தை போக்கியதை நினைவுகூரவேண்டும்.

‘என் சட்டை, என் துண்டு… எல்லாம் பெர்சனல்’ என்று சொல்லமுடியாது. அதுமட்டுமல்ல, ஏழைகள் நாட்டில் பணக்காரத்தனத்துடன் அரசியல் செய்வது அதிகார தோரணையாகவே கருதப்படும். இப்படித்தான் சீமானின் ஆடம்பரக் கார் பற்றி கேட்டதற்கும் அவரது தொன்டர்கள் கொதித்தனர்.

‘மக்களுக்காக, மக்களால்’ நடத்தப்படும் அரசியலே ஜனநாயக அரசியல். வாட்சையோ, சட்டையையோ, எல்லோரும் வாட்ச் பண்ணுவது யதார்த்தம். அண்ணாமலை எகிறுவது அபத்தம். நிருபர்கள் ரஃபேல் வாட்ச் ‘மேக்’ பற்றி கேட்கவில்லை, ’பிரைஸ்’ பற்றித்தான் கேட்டனர். அதற்கு நேரடியாக பதிலளிப்பதை விட்டுவிட்டு, கம்பி கட்டும் கதையெல்லாம் தேவையில்லை.

வாட்சுக்கு பில்லை காட்டிவிட்டு, திமுக அமைச்சர்கள் வருமானப் பட்டியலை காட்டினால் அண்ணாமலை மதிப்பு அந்த வாட்ச் மதிப்பை விட உயரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here