கடந்த 20 ஆம் தேதி, சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த இளைஞர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோரை ஊரடங்கு விதிமுறைக்கு மாறாக கடை திறந்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது
கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உடல் நலம் குன்றிய பென்னிக்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவர் இறந்தார். அவரது தந்தையும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அறிந்த சாத்தான்குளம் மக்கள் இரவில் பழைய பேருந்து நிலையம் காமராசர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். வக்கீல் மணிமாறன் ஆட்டோ ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் வியாபாரிகள் மறியலில் கலந்து கொண்டனர்.
அவர்களிடம் டிஎஸ்பி பிரதாபன் பேச்சுவார்த்தை நடத்தினார். தந்தையையும் மகனையும் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனாலும் மறியல் நள்ளிரவு வரை நீடித்தது.








