சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ் (31) அங்கு மொபைல் கடை நடத்தி வந்தார். கடந்த 20ந்தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.
அங்கு அவருக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறைக் காவலர்கள் அவரை பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
கடையடைப்பு தொடர்பாக முதலில் பென்னிக்சின் தந்தையை போலீசார் அழைத்துச்சென்றதாகவும், காவல் நிலையம் சென்று அதுகுறித்து வாக்குவாதம் செய்ததால் பென்னிக்சை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும், அதன் பின்பே கோவில்பட்டி சிறைச்சாலைக்கு கொண்டு சென்றதாகவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
மேலும், பென்னிக்ஸ் மர்ம மரணத்துக்கு நீதி கேட்டு இன்று சாத்தான்குளத்தில் கடையடைப்பு நடத்தப்போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே பென்னிக்ஸ் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் இருந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பென்னிக்ஸ் உயிரிழப்பு குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









