அண்மையில் இந்திய சீன படை வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் மோதிக்கொண்டனர். இந்த மோதல் நடந்த பள்ளத்தாக்கின் பெயர் ஒரு சாதனையாளருடையது.
லடாக்கில் 1878ஆம் ஆண்டு பிறந்த குலாம் ரசூல் கல்வான், குடும்ப வறுமை காரணமாக தனது 12ஆம் வயதிலேயே மலையேற்றம் மற்றும் சறுக்கு உள்ளிட்ட சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டார். இதன்மூலம் பிறருக்கு தமது மலைப்பகுதியை சுற்றிக்காட்டியும் வந்தார்.
கடும் பனிப்பொழிவின் போதும், பனிச்சரிவின்போதும் அந்தப் பகுதியில் சாதாரணமாக சுற்றி வந்தார். பிற சாகசக்காரர்களுக்கும் போர் வீரர்களுக்கும் வழி காட்டியாகவும் இருந்துள்ளார்.
இவர் 1899ஆம் ஆண்டு கண்டறிந்த நதி ஒன்றை இங்கிலாந்தைச் சேர்ந்த மலையேறும் குழுவினருக்கு காட்டினார். அவர்கள் அந்த ஆற்றுக்கு கல்வான் நுல்லா என்று அவர் பெயரை சூட்டினர். கல்வான் நதி சீனாவின் தெற்கு சின்ஜியாங் பகுதியிலிருந்து காஷ்மீர் வரை ஓடுகிறது. இந்த நதியின் பள்ளத்தாக்குப் பகுதியும் கல்வான் பள்ளத்தாக்கு என்றே அழைக்கப்படுகிறது.
மலையேற்ற சாகசக்காரரான கல்வான் பெயரை நதிக்கு சூட்டி அவர் காலத்திலேயே சந்தோஷப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியாளர்கள், லே மாகாணத்தின் அவருக்கு நல்லதொரு பதவியும் அளித்தனர்.














