கரோனா தொற்று குறித்த பரிசோதனை முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்வதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது என அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை மருத்துவக் கல்லூரி, நுண்ணுயிரியியல் கழகத்தில்
கரோனா RT-PCR ஆய்வகம் கடந்த ஒன்றரை வருடங்களாக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இதுவரை பதிமூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இங்கு செய்யப்பட்டுள்ளன. இதன் சிறப்பம்சமாக குறுகிய காலத்தில் பரிசோதனை முடிவுகள் அவரவர் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக (SMS) பெறும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது.
மேலும் பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்யவும் நகல் எடுக்கவும் வசதியாக இணைய தள முகவரியும் குறுஞ்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா நோய் தொற்று அறிய மாதிரிகள் கொடுப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் சொந்த பயன்பாட்டிலுள்ள அலைபேசி எண்ணையும் தெளிவாக குறிப்பிடவும்.
பரிசோதனை முடிவுகளை www.covid19mdumc.in என்னும் இணையதள முகவரியில் தங்கள் பதிமூன்று இலக்க சோதனை மாதிரி பதிவு எண்ணை (SRF ID) பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனால் முடிவுகளை தெரிந்து கொள்ள நேர விரயமும் வீண் அலைச்சலும் தவிர்க்கப்படும். பரிசோதனை முடிவுகள் மாதிரிகள் கொடுத்த நேரத்திலிருந்து 24 மணி நேரத்தில் குறுஞ்செய்தி மூலம் தெரிந்து கொள்ளலாம். நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட முடிவுகள் 12 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்தப்படுகிறது. மேலும் தகவல் அறிய fieldtolab@gmail.com மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.