சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பணியாற்றிய தஹில் ரமானியை திடீரென மேகாலயா தலைமை நீதிபதியாக செல்ல கொலிஜியம் பரிந்துரைத்தது. தனது மாற்றத்தை பரிசீலிக்கும்படி அவர் விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்ததால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த செப்டம்பர் 21ல் தஹில் ரமானியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றதாக சட்ட அமைச்சகம் அறிவித்து, புதிய தலைமை நீதிபதி பொறுப்பு ஏற்கும் வரை மூத்த நீதிபதி வினித் கோத்தாரியை பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்ற உத்தரவிட்டது.
கடந்த சில வாரங்களாக தலைமை நீதிபதி இல்லாமலேயே உயர் நீதிமன்றம் செயல்பட்டுவந்த நிலையில் கொலிஜியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியும், பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏபி.சாஹியை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றியும் பரிந்துரைத்தது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி இன்று பதவியேற்கிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைக்கிறார். அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி என்னும் ஏ.பி.சாஹி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கொரில்லாப் போரை நடத்திய தம்குஹி எனும் ராஜ வம்சத்தில் பிறந்தவர். 1985-ல் சட்டப்படிப்பை முடித்தபின் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். 2004-ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், அடுத்த ஆண்டே நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.
கடந்த ஆண்டு ஜூனில் தனது சொந்த மாநிலமான பீகார் தலைநகரான பாட்னா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார் .
இவர் அலகாபாத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தபோது உத்தரப்பிரதேசத்தை உலுக்கிய ரூ.10,000 கோடி ஊழல் வழக்கான தேசிய ஊரக சுகாதாரப் பணி ஊழல் வழக்கிலும், பாட்னாவில் பணியாற்றியபோது ஜிபிஎப் ஊழல் வழக்கில் சிறப்பாகத் தீர்ப்பளித்ததற்காக அதிகமாகப் பாராட்டப்பட்டவர். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற உள்ளார்.














