மக்கள் மேம்பாட்டு கழக பொறுப்பாளர் வக்கீல் மாடசாமி மாவட்ட ஆட்சியர், ஒன்றிய மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
தூத்துக்குடி ஒன்றியம் சிலுவைப்பட்டி சுனாமி காலனி வடக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளை ஒட்டி தனியாருக்கு சொந்தமான சுமார் 50 சென்ட் நிலத்தில் கிட்டங்கி ஒன்று இருந்து வருகின்றது. இதேபோன்று கோமஸ்புரம் வட பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியிலும் மற்றுமொரு கிட்டங்கி இருக்கிறது.
இந்த கிட்டங்கிகளில் அரசின் அனுமதி பெறாமல் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து அழுகிய மீன்கள் மற்றும் கழிவு பொருட்களை கொண்டு வந்து அரைத்து எண்ணெய் எடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
மேலும், இந்த தொழிலில் கொடிய அமிலம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. கிட்டங்கியிலிருந்து வெளியேற்றும் கழிவுகளை ஆற்றில் கலப்பதற்காக சுமார் 1 1/2 கி.மீட்டர் வரை சாலையை சேதப்படுத்தியுள்ளது. கழிவு கொட்டிய ஆற்றின் நீர் செந்நிறமாக மாறியுள்ளது. அதில் குளிப்போருக்கு உடல் அரிப்பு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. காட்டாற்று வெள்ள நீரை கோமஸ்புரம் கண்மாயில் சேமிக்க மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் தலையீடு செய்து கிட்டங்கியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.








