நெல்லை மாநகராட்சியை ஒட்டிய தொங்கு சதை பகுதி ரெட்டியார்பட்டி ஊராட்சி. காவல்துறை உள்ளிட்டவற்றில் நெல்லை மாநகரை சார்ந்திருக்கும் இந்த ஊராட்சி, சுமார் 5000 வீடுகளை கொண்டது. மாநகரின் புறநகர் போல் தோற்றமளித்தாலும், இங்கு தீராத பிரச்சினைகள் அதிகம்.
பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களையும் முன்னாள் எம்எல்ஏ வையும் கொண்ட இந்த ஊராட்சியில் குடிநீர் பிரச்சனை கூட பல பத்து ஆண்டுகளாக தீர்க்கப் படாமலேயே இருந்தது. நெடுங் காலத்திற்கு பிறகு கடந்த ஆண்டில்தான் கூட்டு குடிநீர் திட்டத்தில் இது இணைக்கப்பட்டது. ஆனாலும் இன்னமும் அனைத்துப் பகுதிக்கும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
ஊராட்சியில் இருக்கும் ஒரே கிணற்றை நம்பி அனைத்து மக்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. அப்படியே போதிய அளவு இருந்தும் ஊராட்சி செயலர், பம்ப் ஆபரேட்டர் அலட்சியத்தால் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்களாக தண்ணீர் வினியோகம் பல இடங்களில் தடைபட்டு, குறைபட்டு இருக்கிறது.
குறிப்பாக காந்திநகர் இந்த ஊராட்சியில் புறக்கணிக்கப்பட்ட மாற்றாந்தாய் பிள்ளையாக இருக்கிறது.
இங்கு ஒரு மாதமாக தண்ணீர் சீராக விநியோகிக்கப்படவில்லை. ஓரிரு நாட்கள் வழங்கப்பட்ட போதும், குழாயில் ஒழுகு நீராகவே தண்ணீர் வந்ததாக இப்பகுதியினர் கூறுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் முறையிட்டால், ஆபரேட்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என பொறுப்பற்ற பதிலை ஒரு வாரமாக கூறிவருகிறார். கலெக்டரிடம் வாட்ஸ் அப் மூலம் முறையிட்டும் மூன்று நாட்களாக தண்ணீர் விடவில்லை என மக்கள் கூறுகின்றனர்.
காந்திநகர் வடக்குத் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க கோரி பல்லாண்டுகளாக மக்கள் முறையிட்டு வருகின்றனர். கரிசல் பூமியான இங்கு ஓரளவு மழை பெய்தாலே தெருவில் நடக்க முடியாமல் சதுப்பு நிலமாக மாறிவிடுவதால் மிகுந்த கஷ்டத்தை அனுபவிக்கின்றனர். அது கூட பரவாயில்லை,தெருவின் கடைசியில் உள்ள மின்கம்பத்தில் ஓராண்டாக மின் விளக்கு இல்லாமல் பொதுமக்கள் இருளில்தடுமாறுகின்றனர். மலையை ஒட்டிய காட்டுநிலம் என்பதால் விஷ பூச்சிகள் பாம்புகள் தொல்லை இங்கு அதிகம். முற்றிலும் இருள் அடைந்து கிடப்பதால் பொதுமக்கள் இரவில் நடமாடவே அஞ்சுகின்றனர்.
தெற்கு தெருவில் தெருக் குழாய் உடைப்பை ஓராண்டாக சரி செய்யவில்லை.
இப்பகுதி ரெட்டியார்பட்டி மின் நிலையம் எதிரில் இருந்தாலும், தொடர்ந்து சீரான மின் வினியோகம் இன்றி, மின்னழுத்த ஏற்ற,இறக்கம், மின்தடை உள்ளிட்ட பிரச்சினை களை அனுதினம் அனுபவிக்கின்றனர். இதனால் மின்னணு தொடர்பான எந்த சாதனத்தையும் எப்போதும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பலமுறை தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்டவை பழுதாகி விட்டதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து மின் வாரியமும் கண்டு கொள்வதில்லை.
கொரொனா காலம் உள்ளிட்ட சுகாதார நெருக்கடி காலங்களில் கூட இங்கு சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகள் அறவே மேற்கொள்ளப்படுவதில்லை. ஊராட்சியில் நலத்திட்டங்கள் இப்பகுதியை எட்டிப் பார்ப்பதே இல்லை என்கின்றனர் பொதுமக்கள்.
ரெட்டியார்பட்டி ஊராட்சியில் இப்படி ஓர் பகுதி இருப்பதை இனியாவது ஊராட்சி நிர்வாகமும் மின்வாரியம் அறிந்து கொண்டாள் நல்லது என்று பெருமூச்சு விடுகின்றனர் இங்கு வசிக்கும் 20 வீட்டுக்காரர்கள்.








